வேல்முருகனின் கவன ஈர்ப்பு தீர்மானம்...தங்கம் தென்னரசின் பதில் என்ன?

வேல்முருகனின் கவன ஈர்ப்பு தீர்மானம்...தங்கம் தென்னரசின் பதில் என்ன?

இன்று சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

மூன்றாம் நாள் கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி நாளான இன்று கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.  சட்டசபையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அந்த வகையில், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது வேல்முருகன் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துகளை முன்வைத்து விவாதித்தனர். அப்போது, புதிய விமான நிலையம் தொடர்பான தீர்மானத்தின் மீதும், அதன்மீது வைக்கப்பட்ட பல்வேறு விவாதங்களுக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசினார்.

தங்கம் தென்னரசு பதில்:

வேல்முருகன் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் பசுமை வளாக விமான நிலையம் ஏன் தேவை என்பதை விளக்கி பேசினார். அப்போது,  தற்போதுள்ள விமான நிலையம் 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றதாக மட்டுமே இருக்கிறது. ஆனால், 2028 ஆம் ஆண்டு 3.5 கோடி பயணிகளை கையாளக்கூடிய நிலை விமான நிலையத்திற்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்குகளை கையாள்வதில் சென்னை விமான நிலையம், நான்கு விழுக்காடு வளர்ச்சியையும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் இரண்டு மடங்கு கூடுதல் வளர்ச்சியையும் பெற்றுள்ள நிலையில், சரக்குகளை கையாள்வதில் சென்னை விமான நிலையத்திற்கு பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். அதாவது, இரவு நேரத்தில் மட்டுமே சரக்குகளை கையாள முடிவதால், மிகப்பெரிய ஒரு பொருளாதார பின்னடைவை சென்னை விமான நிலையம் சந்திக்கிறது. 

இதையும் படிக்க: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது ஏன்? சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வந்த கருத்துக்கள் என்ன?

35 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும்:

இதன் காரணமாகவே பசுமை வளாக புதிய விமான நிலையம் என்பது தேவையாக இருக்கிறது . இது காலத்தின் தேவை. இத்தகைய புதிய விமான நிலையம் அடுத்த 35 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டு அமைக்கப்படுகிறது. பத்து கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில் அமையும் இந்த விமான நிலையம், அமைத்து முடிக்கவே எட்டு ஆண்டுகள் ஆகும் என்பதையும் தெரிவித்தார்.

பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளை நிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரை 11 இடங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்வு செய்தோம். அதற்கு பரந்தூரின் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

செலவு செய்தால், வருவாய் கிடைக்கும்:

தொடர்ந்து பேசிய அவர், விமான நிலையத்தை அமைக்கும் விவகாரத்தில் 100 ரூபாய் செலவு செய்தால், 325 ரூபாய் வருவாய் கிடைக்கும். அதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை நகரத்தோடு பல புதிய வழித்தடங்கள் உருவாகும். இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சரக்குகளை கையாள்வதில் மாபெரும் வளர்ச்சி கிடைக்கும் என்பதில் எந்தவித கருத்தும் இல்லை என்று தெரிவித்த அவர், புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக  மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மக்களோடு பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பலமுறை சந்தித்து பேசியிருப்பதாக தெரிவித்தார். எனினும், விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு, அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று உறுதி அளித்தார். இவ்வாறாக தீர்மானம் மீது தங்கம் தென்னரசு  பதிலளித்தார்.