விடுதலை படத்தில் காட்டப்படும் பெருமாள் வாத்தியார் யார்?

விடுதலை படத்தில் காட்டப்படும் பெருமாள் வாத்தியார் யார்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காவல்துறையில் உள்ள சவால்களையும் வளங்களை கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தையும் முக்கிய கதைக்களமாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

ஆனால் உண்மையிலே இப்படி ஓர் நபர் இருந்தாரா? என்ற கேள்வியை படத்தை பார்ப்பவர்களுக்கு எழுப்பி உள்ளது. 80 களில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற போராளியாக இயங்கி வந்தவர் பள்ளி ஆசிரியர் கலியபெருமாள். பள்ளிக்கூட வாத்தியாராக இருந்த கலியபெருமாள் சிபிஎம் கட்சியில் செயல்பட்டுவந்தார். மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்ற ஊரில் ஏற்பட்ட உழவர்களின் போராட்டத்தில் அப்போதைய சிபிஎம் கட்சி இரண்டாக பிளவு பட்டது. அதில் விவசாயிகள் பக்கம் நின்றவர்கள் தங்களை புதிய கட்சியாக உருவாக்கி கொண்டனர். அது நக்சல்பாரி கட்சி என்று அழைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் அக்கட்சியை உருவாக்குவதில் ஒரு முக்கிய நபராக வாத்தியார் கலியபெருமாள் இருந்தார்.

தீவிர பொதுவுடைமைவாதியான கலியபெருமாள் பண்ணையார்களுக்கு எதிராக கூலி விவசாயிகளை அணிதிரட்டுவதில் ஈடுபட்டார். அப்படி அணிதிரட்டலின்போது ஏற்பட்ட முரண்பாடுகளில் பண்ணையார்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவ்வழக்குகள் வாத்தியாரின் மீது போடப்பட்டு அவரும் அவரது மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனர்.

கலியபெருமாள் தனது தூக்கு தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு கூட செய்யாமல் உறுதியாக இருந்தார். அவர் சிறையில் இருந்தபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு ஏற்பட்டது.  ஈழ போராளிகளின் தொடர்பு வாத்தியாருக்கு அவரது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை உழவர்களின் போராட்டத்தை முன்னெடுத்த வாத்தியார் அதன் பின்னர் தனித் தமிழ்நாடு கொள்கையை முன்னெடுத்தார்.

வாத்தியாரின் தனித்தமிழநாடு கொள்கையை அவரது கட்சியே நிராகரித்து, அவரையும் டீ.ஏ என்று அழைக்கப்பட்ட தமிழரசனையும் கட்சியை விட்டு வெளியேற்றியது. அதனால் தனித்தமிழ்நாட்டிற்கு என தனி கட்சியை உருவாக்கினார். அதன் படை பிரிவாக தமிழ்நாடு விடுதலை படை என்ற படையும் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக தமிழரசன் செயல்பட்டார்.

தமிழ்நாடு விடுதலைப்படை தென்னாற்காடு, திருச்சி மாவட்டங்களில் வலுவாக வேரூன்றி இருந்தது. இவர்களது தலைமையில் பாண்டிச்சேரியை ஒட்டியுள்ள பனையூர், வீரடிக்குப்பம் பண்ணையார்களிடம் நிலத்தை கைப்பற்றி கூலி விவசாயிகளுக்கு வழங்கினர் அவர்களது தோழர்கள். ஜெயங்கொண்டம் அருகே உள்ள  வல்லம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக இருந்த முந்திரி காடுகளை மக்களுக்கு கூட்டுறவாக்கி கொடுத்தனர். இறையூர் சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகைகளை பெற்று தந்தனர். இது அவர்களுக்கு மேலும் மக்கள் ஆதரவை பெருகச் செய்தது.  

திருவையாருக்கு வந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு வெடிகுண்டு வைத்தனர் வாத்தியாரின் ஆட்கள். பிரதமரின் வாகனம் வருவதற்கு முன்பே குண்டு வெடித்ததால் ராஜீவ் காந்தி அதிலிருந்து உயிர் தப்பினார். தனித்தமிழ்நாடு, தமிழீழ விடுதலை, பன்னாட்டு கம்பெனிகளை எதிர்ப்பது என தீவிரமாக இவர்கள் செயல்பட்டுவந்தனர். இந்திய அமைதி படையை இலங்கையிலிருந்து திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மருதையாறு பாலத்தில் வெடிகுண்டு வைத்தனர். அந்த வழியாக வந்த மலைகோட்டை ரயில் இதில் விபத்துக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்தனர். இதனால் இவர்கள் மீதான அரசின் ஒடுக்கு முறையும் அதிகரித்தது. பின்னர் பொன்பரப்பியில் நடந்த வங்கி கொள்ளையின்போது தமிழரசன் உள்ளிட்ட இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் இவர்களின் செயல்பாடு குறைந்திருந்தது.

பின்னர் அடுத்த தலை முறையினர் இந்த இயக்கத்தை முன்னெடுத்து சென்றனர். அவர்களுக்கும் வாத்தியார் ஆதரவாக இருந்தார். புத்தூர் காவல் நிலைய தாக்குதல் தொடங்கி வீரப்பனுடன் சேர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தியது வரை இந்த இயக்கத்தின் வரலாறு நீளுகிறது.    
தமிழ்நாடு விடுதலைப் படையின் கலிய பெருமாள்தான் இந்த பெருமாள் வாத்தியார் என்று படத்தை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இத்திரைப்படம் தொடங்கும் போதே "இது கற்பனையான கதை. இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோ எந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல" என வெற்றிமாறன் தன் குரலிலேயே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.