
சென்னைக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பிளான் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக உட்கட்சி பூசல்:
அதிமுகவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஒற்றைத் தலைமை பிரச்னையை ஒட்டி அதிகாரப்போட்டி வெடித்து வருகிறது. இன்றளவும் ஈபிஎஸ்க்கும் ஓபிஎஸ்க்கும் இடையே அதிகாரப்போடியானது அணையா நெருப்பாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பேச்சானது அரசியல் அரங்கில் வட்டமடித்து வருகிறது.
தமிழகம் வரும் பிரதமர்:
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். அவரை வரவேற்க அதிமுக சார்பில் ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் மதுரை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பிரதமரை சந்திக்கவும் அவர்கள் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசுவாரா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஈபிஎஸை சந்திக்க மறுத்த நரேந்திர மோடி:
அதற்கு காரணம், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற ஈபிஎஸ், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நேரம் வழங்கப்படாத காரணத்தால் ஈபிஎஸ் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் சந்திக்காமல் சென்ற மோடி:
அதேபோன்று, கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வருகை புரிந்தார். அப்போதும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி சந்தித்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி சென்னை வந்த போது ஈபிஎஸ்சும், டெல்லி திரும்பும் போது ஓபிஎஸ்சும் விமான நிலையத்தில் சந்தித்தனர்.
இந்த பயணத்திலாவது சந்திப்பாரா?:
இந்த பின்னணியில், தற்போது திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் சந்திப்பதற்கு நேரம் வழங்குவாரா? அப்படி வழங்கினால் அதிமுக பிளவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் இருவரிடமும் பேசுவாரா? அல்லது வேறு முக்கியத் தலைவர்களிடம் பேசிக்கொள்ளுமாறு அறிவுறுத்துவாரா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வல்லுனர்களிடையே நிலவி வருகிறது.