விளை நிலத்தில் கல்குவாரியா? தடை விதிக்குமா ?.. அரசு…!

விளை நிலத்தில் கல்குவாரியா?  தடை விதிக்குமா ?.. அரசு…!

தேனி மாவட்டம் போடி அருகே விவசாய நிலங்களுக்கு மத்தியில் மாட்டுப்பண்ணை என்கிற பெயரில் கல்குவாரி அமைக்கும் பணி் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் அரங்கேறி வரும் இந்நிகழ்வால் கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகளின் குமுறல்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...!

மழையின்மை, புதிய வேளாண் சட்டம், ஹைட்ரோ கார்பன்  திட்டம் என்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, மேலும் ஒரு தலைவலியாக கல்குவாரிகள் களமிறங்கியுள்ளன. கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் விவசாய நிலங்களில் படிவதால், பயிர்களில் முளைப்பு திறன் குறைந்து, மகசூல் பாதிக்கப்படும் என்பதால், குவாரிகளை விளைநிலங்களுக்கு அருகாமையில் அமைக்க  அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், தேனி மாவட்டம் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுரோட்டில் விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில், விவசாய நிலங்களுக்கு மத்தியிலேயே கல்குவாரி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இயற்கை எழில் சூழ்ந்தவாறு, விவசாய பணிகள் நடைபெற்று வரும் இப்பகுதியில் மாட்டுப் பண்ணை வைப்பதாக கூறி 5 ஏக்கர் நிலத்தை வாங்கிய போடியை சேர்ந்த ஜக்கப்பன் என்பவர், தற்போது அதற்கு மாறாக, கல்குவாரி அமைக்கும் பணியை  துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாய நிலத்திற்குள் ராட்சத இயந்திரங்களை கொண்டு வந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள், தமிழக கனிம வளங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகவே கல்குவாரி அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக அப்பகுதியில் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கல்குவாரியால் 500 ஹெக்டேர் அளவிலான மாமரங்களில் மலட்டு தன்மை ஏற்பட்டு, விவசாயம் முற்றிலும் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே விவசாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த கல்குவாரிக்கு,  தமிழக அரசு  தடை விதித்து, தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்குவாரிக்கு  தடை விதித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…!