
பெரியகுளம் சேர்மனாக தனது இளைய மகனை இறக்கி தேனியை தனது முழு கட்டுப்பாட்டில் ஓபிஎஸ் வைத்துக் கொள்வாறா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் கட்சிகள். இதில் அதிமுக மிகவும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறது. ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மட்டும் தான் அதிமுக கையில் உள்ளது. இதிலும் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டால், அதிமுக என்ற கட்சி இல்லாமலையே போகிவிடும் என கூறப்படுகிறது. ஆகையால் நகப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக களமிறக்கப்படும் வேட்பாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறது அதிமுக தலைமை.
தேர்தல்களில் தனது ஆதரவாளர்களுக்கு சரிசமமான பங்கு தரவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தான் ஓபிஎஸ் இபிஎஸ்சுடன் சேர்ந்து அதிமுகவில் தலைமையில் உள்ளார். ஏற்கனவே தனது மூத்த மகனை தேனி நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்து விட்டார். விரிவு படுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில், நிச்சயம் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவருக்கு பதவி கொடுக்கப்படாதது ஒருவித வருத்தத்தை அளித்தாலும் சரி என்று விட்டு விட்டார். இந்த நிலையில், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் சேர்மன் பதவிக்கு ஓபிஎஸ்ஸின் இளைய மகனான ஜெயபிரதீப்பை நிறுத்துமாறு அப்பகுதி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே தனது மூத்த மகனும், தானும் அரசியலில் இருப்பதால், இரண்டாவது மகனையும் அரசியலுக்குள் இறக்குவதை ஓபிஎஸ் விரும்பவில்லை என ஒரு புறம் கூறப்பட்டாலும், ஜெய பிரதீப்பின் பொறுப்பான செயல்கள் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் பெரிதாக பார்க்கப்படுகிறது. ஜெயபிரதீப்பை பொறுத்தவரை ஆன்மிக பற்றாளர் என்ற பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார். கோயில் திருப்பணிகள், கும்பாபிஷேக விழாக்களில் கலந்துகொள்வது, சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபடுவது என்றிருக்கும் ஜெயபிரதீப்பிற்குள், அரசியல் ஆசையும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் தான் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட இவர் கம்பம் தொகுதியில் களமிறக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது.
நேரடி அரசியலில் ஈடுபடாத இவர், விவசாயப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஆன்மிகம், விவசாயம் என வலம் வந்துகொண்டிருக்கும் ஜெயபிரதீப்பை பெரியகுளம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடக் கோரி அவரது ஆதரவாளர்கள் நச்சரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பெரியகுளம் நகராட்சி சேர்மனாக ஓ.பி.எஸ். உடன்பிறந்த சகோதரர் ஓ.ராஜா இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியகுளம் நகராட்சியை கைப்பற்ற திமுக மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பல்வேறு வியூகங்களை வகுத்து அதை செயல்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார். ஆக அவரை எதிர்த்து ஒரு பலமான வேட்பாளரை அதிமுகவில் இருந்து இறக்க வேண்டும் என்றால் அதற்கு ஜெயபிரதீப் பொறுத்தமாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஜெயபிரதீப்பையும் அரசியலில் இறக்கிவிட்டால், திமுகவை இனி ஒரு குடும்ப கட்சி என்று கூற முடியாமல் போய்விடும். அதனையும் சற்று அதிமுக தலைமை சிந்தித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.