
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டார். இதே போல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூவும் செயலாளராக கே.பி அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வு அதிமுகவை தாண்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் அதிகாரம் மிக்க பதவி என்றால் அது எதிர்க்கட்சி தலைவர் பதவியும், கட்சி கொறடா பதவியும் தான். இதில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பொறுப்பேற்க, கட்சி கொறடா பதவி எஸ்.பி வேலுமணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எடப்பாடி, வேலுமணி இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள், மேலும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே அதிமுகவை கொங்கு கட்சி என்று விமர்சித்து வரும் நிலையில் தற்போது இந்த நியமனம் கட்சியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் இந்த கொறடா பதவியை அதிமுகவில் பல தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், மூத்த தலைவர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் முன்னணியில் இருந்தனர். ஆனால் இத்தனை பேரையும் தாண்டி வேலுமணிக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது வன்னியர் தேவர், பட்டியலின சமூக மக்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இத்தனை இடர்களையும் தாண்டி எஸ்.பி.வேலுமணிக்கு கொறடா பதவியை கொடுக்க முக்கியமான காரியங்களை எடப்பாடி அடுக்கியுள்ளார். அதாவது அதிமுகவில் தேர்தலில் அதிக செலவு செய்தவர்கள் வரிசையில் முதல் இரு இடத்தில இருப்பவர்கள் எடப்பாடியும், வேலுமணியும் தான். இப்போது ஆட்சி கைவிட்டு போயுள்ள நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெரும்தொகை செலவிடவேண்டியிருக்கும். அந்த அளவு தொகை செலவிடும் அளவு அதிமுகவில் வலுவாக இருப்பவர் வேலுமணி தான்.
ஒருவேளை அவருக்கு எந்த முக்கிய பதவியும் கொடுக்காவிட்டால் கட்சிக்கு போதிய நிதி அளிக்க முன்வரமாட்டார்.அதனால் தான் அவருக்கு இந்த முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் அதிமுக கூட்டணிக்கு வென்று கொடுத்துள்ளார். அதனால் அவருக்கு இந்த பதவியை கொடுப்பது தான் சரியாகயிருக்கும் என்றும் எடப்பாடி கூறியுள்ளார்.
அப்படியும் முனுமுனுத்தவர்களிடம் வேலுமணி கொடுக்கும் அளவு பணத்தை நீங்கள் கொடுத்தால் நீங்கள் கூட கொறடா பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூற முனுமுனுத்தவர்கள் அனைவரும் அமைதியாகியுள்ளனர். இதன் காரணமாக தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட இந்த நியமனங்களுக்கு எதிராக சிறு எதிர்ப்பு கூட எழவில்லை. அதுமட்டுமல்லாமல் எடப்பாடியின் இந்த முடிவை பன்னீர்செல்வமே ஏற்றுக்கொண்ட பின் நாம் என்ன சொல்ல என்று அதிமுகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் அமைதியாகியுள்ளனர். எது எப்படியோ தன் ஆதரவாளரான வேலுமணிக்கு முக்கிய பதவியை கொடுத்து கட்சியில் தன்னை வலுப்படுத்திக்கொண்டார் எடப்பாடி என்று அதிமுகவில் பேசிக்கொள்கிறார்கள்.