கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இவ்வறிவிப்பை ஒட்டி, பாஜகவும், காங்கிரஸும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிக மும்மரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக கர்நாடக தேர்தலில் அவர்களை எதிர்த்து தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது.
அந்தவகையில், அதிமுக சார்பில் கர்நாடக தேர்தலில் புலிகேசி தொகுதியில் அன்பரசனை வேட்பாளராக அறிவித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக களமிறங்கிய ஓபிஎஸ் அதே புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக அவர் தரப்பு வேட்பாளரை அறிவித்தார்.
ஆனால், நேற்றைய தினம் அதிமுகவின் பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கப்பட்டது.
இதையும் படிக்க : ரம்ஜான் திருநாள்...முக்கிய தலைவர்கள் வாழ்த்து...!
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் புலிகேசி தொகுதியில் இபிஎஸ் தரப்பு வேட்பாளரே போட்டியிடுவதாகவும், தேர்தல் நடத்தும் அலுவலரின் தவறான புரிதலால் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காந்திநகர் தொகுதியில் ஓ பி எஸ் தரப்பு வேட்பாளர் மனு ஏற்கப்பட்ட நிலையில், அங்கு அதிமுக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை எனவும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.