மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சேர்க்கை? குழப்பத்தில் பொதுமக்கள்..!

தமிழ்நாட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சேர்க்கை எப்போது?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சேர்க்கை? குழப்பத்தில் பொதுமக்கள்..!
கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் இந்தியாவில் 16 இடங்களில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்கே 3 ஆண்கள் தாமதமானது. ஒரு வழியாக கடந்த 2018-ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

மதுரையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கான மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெறுவதுடன், இந்த மாநிலங்களில் வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம், அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்று, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
 
ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணிகளே தொடங்காத நிலையில், விரைவில் மருத்துவமனையை தொடங்கி வெளிப்புறா சிகிச்சை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ்க்கான சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது.மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தயாராக உள்ளோம் என்று தெரிவித்த மத்திய அரசு, இது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையையும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்படவில்லை என்றும் வழக்கின் அடிப்படையிலேயே பதில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு எய்ம்ஸுக்கான திட்ட வரைவு எதையும் வழங்கவில்லை என்றும் தமிழக அரசின் நிலையை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து தமிழக அரசின் நிலையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
இப்படி மாறி மாறி மாநில அரசு மத்திய அரசையும், மத்திய அரசு மாநில அரசையும் குறை கூறி வரும் நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமாகி உள்ளது.