சென்னையில் மேலும் ஒரு அடையாளம்- மாநில அரசின் முயற்சியால் கிடைத்த வெற்றி!

உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா  வைரஸை கண்டறியும் விதமாக முதன் முதலாக மாநில அரசின் சார்பில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் ஒரு அடையாளம்- மாநில அரசின் முயற்சியால் கிடைத்த வெற்றி!

தமிழகத்தில் கொரோனா முதல் அலை ஓய்ந்து, இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பெங்களூர் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிப்பது மிகுந்த சவாலை ஏற்படுத்தியது. தொடர்ந்து நோய் பரவல் அதிகரிக்க தமிழகத்தில் பரவி வரும் கொரோனோ பாதிப்புகள் தன்மை குறித்து கண்டறிய மரபணு பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்வதற்கான தேவை அதிகரித்தது. உருமாறிய கொரோனோ வைரசை கண்டறியும் ஆய்வகங்கள் பெங்களூரு , புனே  உள்ளிட்ட 23 வெளி மாநிலங்களில் இருப்பதால், தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் உருமாறிய வைரசை கண்டறியும் ஆய்வகம் அமைக்க வேண்டியதற்கான தேவை ஏற்பட்டது.

இதன்படி, கட்நத 2 ஆம் தேதி சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது உருமாறிய கொரோனோ வைரஸை கண்டறிய ஆய்வகம் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே மாநில அரசின் சார்பில் தமிழகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் 12 நாட்களுக்குள் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த ஆய்வகம் மூலமாக இனி கொரோனோ தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு எந்த வகை கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும் என பொது சுகாதாரத்துறை ஆய்வக இணை இயக்குநர் ராஜு தெரிவிக்கிறார். ஒரு வாரத்தில் குறைந்தது 180 லிருந்து 200 மாதிரிகள் வரை ஆய்வு செய்யும் வகையில் இந்த மையம் வாயிலாக மரபணு பரிசோதனைக்கு உட்பட்ட மாதிரிகளின் முடிவுகள் 3 அல்லது 4 நாட்களுக்குள் பெறப்படும் என ஆய்வகத்தின் அலுவலர் ஹேமாஸ்ரீ கூறினார். பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில் பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஆய்வக நுட்பனர்கள் ஒரு வார காலம் பயிற்சி பெற்று தங்களது பணியை  தொடங்கியுள்ளனர்.

கொரோனோ இரண்டாவது அலையில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்த வேளையில் வைரஸின் உருமாற்றம் தொடர்பான மாதிரிகள் முடிவுகள் கடந்த காலங்களில் தாமதமாக கிடைக்கப்பெற்றது, தற்போது புதிதாக தொடங்கபட்ட இந்த மரபணு பகுப்பாய்வகம் வாயிலாக விரைந்து உருமாற்றம் அடைந்த பாதிப்புகளை கண்டறிய முடியும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.