எஸ்.பி.வேலுமணி:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாகவும் உள்ளவர் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடியின் வலது கரமாக பார்க்கப்படும் வேலுமணி, மேற்கு தமிழ்நாட்டில் மிக முக்கிய புள்ளியாகவும் உள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:
வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: சொந்த கோட்டையில்...செந்தில் பாலாஜியை சீண்டிய பாஜக...!
மூன்றாவது முறை:
சென்னையில் அவர் தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது. ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெறுகிறது.
விஜயபாஸ்கர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றபட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்டுகிறது.
இரண்டாவது முறை:
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடக்கிறது. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இது 2 வது முறை நடைபெறும் சோதனையாகும்.
நினைவுகூரப்படும் ஸ்டாலின் பேச்சு:
திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அழுத்தமாக கூறியது, திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்படும், சட்டப்படி நடவிகை எடுத்தே தீருவோம் என்பது தான். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுவது அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.