தமிழகத்தில் நான்கில் ஒரு பங்குக்கு குறிவைக்கும் பாஜக.. அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்  இதுதானா.? 

தமிழகத்தில் நான்கில் ஒரு பங்குக்கு குறிவைக்கும் பாஜக.. அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்  இதுதானா.? 

தமிழக பாஜக தலைவராக கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார் எல்.முருகன். கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் 4 இடங்களில் தாமரையை மலரவைத்தார். அதோடு தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைய எல்.முருகனின் முயற்சியும் முக்கியமானது. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய இணையமைச்சராக பொறுப்பு கொடுத்தது பாஜக தலைமை. 

இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட அண்ணாமலை திடீரென பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததுமே அவருக்கு துணைத்தலைவர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இந்நிலையில், அவர் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. மேலும் அண்ணாமலையின் பதிவியேற்பு விழாவில் சில மூத்த பாஜக தலைவர்கள் முகத்திலும் அது வெளிப்பட்டது. இதனால் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க அவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்க பாஜக தலைமை முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதோடு, தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்துக்கே காரணமே சீமான் போன்றோருக்கு செல்லும் இளைஞர் வாக்குகளை பாஜகவுக்கு திருப்புவதும், வரும் எம்.பி தேர்தலில் பாஜகவுக்கு குறைந்தது 10 இடங்களை பெற்றுக்கொடுப்பதுமே என்று சொல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவான நிலையில் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளவே எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.