அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்...பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதா...?

அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்...பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதா...?

தமிழ்நாடு பாஜகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமார் விலகி அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து,  தற்போது ஒரு நிர்வாகி விலகி இருப்பது பாஜக - அதிமுக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பேச்சாள் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி இருக்காது எனவும் செய்திகள் பரவி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், கட்சிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. அதன்பிறகு ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு ஆதரவு அளித்து பிரசாரம் மேற்கொண்டது. இப்படி கூட்டணியாக செயல்பட்டு வரும் கட்சிகளுக்குள், தற்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் மீண்டும் இந்த கூட்டணி உடைகிறதா? என்ற பிம்பத்தை எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், நேற்றைய தினம் திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிர்மல் குமார், அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குற்றம் சாட்டியிருந்தார். 

பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார், கூட்டணி கட்சியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக்கொண்டு  இதை செய்திருக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் மாநில செயலாளரான திலீப் கண்ணன், இன்று பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள திலீப் கண்ணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொந்தக்கட்சி காரர்களையே வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கிடையில் நேற்றைய தினம்,  பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டிருந்த ட்விட்டர் செய்திக்கு, ”எங்கிருந்தாலும் வாழ்கணா...நாங்கள் என்றும் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் வழியில்...” என்று பதிலளித்திருந்தார். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் எப்போதும் அண்ணாமலை வழியில் என்று சொன்ன திலீப் கண்ணன், அக்கட்சியிலிருந்து விலகி இருப்பது பாஜக அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பின்னணியில் ஏற்கனவே, பாஜகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமார் விலகி அதிமுகவில் இணைந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது விலகி இருக்கும் திலீப் குமாரும் அதிமுகவுக்கே செல்வாரா? என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் பாஜக - அதிமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் பார்வையை முன்னிறுத்தி வருவதாக  அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com