ஜெய் பீம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..! ஆனால் இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து..!

ஜெய் பீம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..! ஆனால் இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்..!

ஜெய் பீம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் வருகிறது என்றாலே பாஜகவினர் அதற்கு இலவசமாக விளம்பரம் செய்து விடுவர். படத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளனர், இந்து மதத்திற்கு எதிராக படம் உள்ளது என அதில் நடிக்கும் நடிகர்களுக்கு மதச்சாயம் பூசுவது உண்டு. அப்படியிருக்க, கடந்த 2-ம் தேதி ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளியாகி ஹிட்டான படம் ஜெய்பீம். 

1990-களில் இருளர் இனத்தை சேர்ந்த மக்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு நடத்திய ஒரு வழக்கை, மையமாக வைத்து ஜெய்பீம் படம் உருவாகியிருந்தது. மக்கள் மத்தியில் எகோபித்திய ஆதரவு வந்த நிலையில், படத்தில் வன்னியர் சமுதயாத்தை இழிவு படுத்தியிருப்பதாக இயக்குநர் மோகன் ஜி தொடங்கி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வரை பலரும் எதிர்ப்பு குரல் தெரிவிக்க ஆரம்பித்தனர். அன்புமணி ராமதாஸ், 9 கேள்விகள் அடங்கிய கடிதத்தை சூர்யாவுக்கு எழுதி, சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு சூர்யாவும் பதில் அறிக்கை வெளியிட, அது திருப்திகரமாக இல்லை என வன்னியர் சமுதாயத்தினர் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், படம் குறித்து பாஜகவினரிடமிருந்து எந்த கருத்துமே வரவில்லையே என எதிர்பார்த்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பீம் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும், அதேவேளையில் வரலாற்றை படமாக எடுக்கும் போது, அதன் உண்மைத் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஜெய்பீம் திரைபடத்தில் இடம்பெற்ற சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆனாலும் இந்தப் படம் அற்புதமான படம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். 

ஜெய்பீம் திரைப்படத்தில் அரக்க குணம் படைத்த குற்றவாளி காவல்துறை அதிகாரியாக நடித்த கதாபாத்திரத்தின் பெயர் குரு மூர்த்தி என மாற்றப்பட்டிருந்தது. அதேபோல அவரது வீட்டில் அக்னிசட்டி படம் பொருந்திய காலண்டர் இடம்பெற்றதும், தான் வன்னியர் சமுதாய மக்களின் ஆதங்கத்திற்கு காரணமாக அமைந்திருந்தது. அதன் பிறகு காலண்டரில் புகைப்படம் மாற்றப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.