தக்காளியை தொடர்ந்து உயரும் கத்திரிக்காய் விலை..!

தொடர் இன்னல்களுக்கு ஆளாகும் இல்லத்தரசிகள்..!

தக்காளியை தொடர்ந்து உயரும் கத்திரிக்காய்   விலை..!

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால், சென்னை கோயம்பேடுக்கு தக்காளி வரத்து குறையத் துவங்கியது. இதனால் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. தற்போது மழையின் அளவு குறைந்ததாலும், வரத்து அதிகரித்ததாலும் தக்காளி விலை கிலோ ரூ.80-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காயின் விலை கிடு கிடுவென உயரத் 
துவங்கியுள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட 
பல்வேறு மாவட்டங்களில், கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், 
கத்தரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால், தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்திருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. 

அதன்படி தற்போது சென்னை கோயம்பேட்டில் முதல்ரக கத்தரிக்காய் விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், இரண்டாம் தர கத்தரிக்காய் ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர். காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.