அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

தமிழ் சமூகத்தின் அடுத்தக்கட்ட ஆளுமைகளோடு மாலைமுரசு செய்திகள் ஊடகத்தின் உரையாடல்...

அடுத்தக்கட்ட ஆளுமைகள்!
Actor Somu

நடிகர் சோமு, நடிகர் என்று சொல்வதை விட வில்லன் சோமு என்று சொன்னால் சரியாக இருக்கும்.   வடசென்னை, சார்பட்டா, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய  கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர், முக்கிய வில்லனாக நடித்த முந்திரிக்காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தோற்றத்தில் கரடுமுரடாக தெரியும் இவர் ஒரு மென் பொறியாளர் என்பது ஆச்சரியமான ஒன்று. மேலும், ஊக்கமூட்டும் பேச்சாளர், பறவைகள் ஆர்வலர் என பன்முகம் கொண்ட இவரோடு சில கேள்விகள்...

 

1.பொதுவாக எல்லோரும் ஹீரோவாக நடிக்க ஆசை கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டு இருப்பதற்கான காரணம் என்ன?

 நான் வில்லனாக மட்டும் நடிக்க ஆசைப்படுவதில்லை. வில்லனாகவோ அல்லது நல்ல குணச்சித்திர நடிகராகவோ நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாகவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி, தற்போது அறிமுகமாகியுள்ள கவின் வரை மொத்தம் தமிழ் சினிமாவில் கிட்டத்திட்ட 55 முக்கிய ஹூரோக்கள் உள்ளனர். பிற மொழி சினிமாவை சேர்ந்தவர்கள் கூட தமிழில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அவர்களை நான் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இப்படி தமிழ் ஹீரோக்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு சிறந்த படம் என்று நடித்தால் கூட 55 சிறந்த படங்கள் வரலாம். ஆனால், அந்த அளவிற்கு இங்கு இயக்குநர்கள் இல்லை. அவற்றை பார்க்க நேரமும் இல்லை. ஆகையால் இந்த 55 ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி போடுவதை விட வில்லனாக நடிப்பது சிறந்தது. நமது தலைமுறையில் இருந்து எடுத்துக்கொண்டால் கூட வில்லன் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மலையாளம், இந்தி, தெலுங்கு சினிமாவில் இருந்து நடிகர்களை இறக்கி நமது சினிமாவின் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க வைக்கிறார்கள்.  எனவே இந்த 55 ஹீரோக்களிடம் போட்டிப்போட்டு ஏதோ ஒரு படம் நடிப்பதைவிட, இவர்களில் சிலருக்கு வில்லனாக நடிப்பது சிறந்தது.

 

இரண்டாவதாக, என்னுடைய தோற்றமும் இதற்கு ஒரு காரணம். உதாணத்திற்கு எடுத்துக் கொண்டோம் என்றால்,  நமது உணவு, வீடு, வாகனம் போன்றவற்றை நமது விருப்பத்திற்கு வாங்குகிறோம். அதே நேரத்தில் நமது உடைகளை மற்றவர்களின் விருப்பித்திற்கு விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான், பார்த்து இது நன்றாக உள்ளதா? இல்லையா? என்று கூறப் போகிறார்கள். அது போலத்தான் சினிமாவும். சினிமாவில் நமக்கு என்ன பிடிக்கும் என்பதை விட, இயக்குநர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியமானது. இயக்குநர் களஞ்சியத்தை நான் முதன்முதலில் பார்க்க சென்றபோது அவர் என்னை பார்த்துவிட்டு, முந்திரிக்காடு படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தை நான் செய்ய வேண்டும் என்றும் அதற்காக என்னை தாடி வளர்த்துக்கொண்டு வருமாறும் கூறினார். ஒரு இயக்குநரின் பார்வையில் முதன்முதலாக நான் வில்லனாகத்தான் தெரிந்தேன். அவர் மட்டுமல்ல, நான் எந்த இயக்குநரை பார்த்தாலும் அவர்களும் எனக்கு வில்லன் கதாபாத்திரத்தைதான் பரிந்துரைக்கிறார்கள். பெருவாரியான இயக்குநர்களின் பார்வையில் நான் வில்லனாகத் தான் தெரிந்திருக்கிறேன். எனவே சினிமா என்னை எப்படி பார்க்கிறதோ அந்த பாதையில் பயணிப்பதே எனக்கு பிடித்திருக்கிறது.

2.நீங்கள் நடித்த முதல் படம் முந்திரிக்காடு தான் எனும்போது, அது இப்போதுதான் வெளியாகி உள்ளது. இந்த தாமதத்திற்கு என்ன காரணம்?

 இது பரவலாக எனக்கு தெரிந்தவர்கள் கேட்கக் கூடிய கேள்விதான். நான் முதலில் நடித்த முந்திரிக்காடு படம் நிறைய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. படத்தை நேரத்திற்கு வெளியிடுவதற்கு தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. முந்திரிக்காடு படம் எடுக்கத் தொடங்கிய காலத்தில்தான் 500, 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு வந்தது. பெரும்பாலும் சினிமா எடுப்பவர்கள் பணமாக வைத்து தான் சம்பளம் மற்றும் சினிமா எடுப்பதற்கான செலவுகளை சமாளிப்பார்கள். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புதல் போன்றவை மிகவும் பிற்காலத்தில்தான் சினிமா துறையில் நுழைந்தன. முந்திரிக்காடு படத்திற்கு முதன் முதலில் பணமதிப்பிழப்பினால் ஒரு தடை, அதன்பிறகு கொரானா ஊரடங்கினால் வந்த தடைகள் இவற்றையெல்லாம் தாண்டி வரும்போது படத்தை வெளியிட போதுமான பொருளாதார பலம் தயாரிப்பாளரிடம் இல்லை. எல்லா பிரச்சினைகளையும் கடந்து திரைப்படம் வெளிவருவதற்குள்ளாக ஆறேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. 2015ல் நான் முதன்முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட படம் முந்திரிக்காடு. அதன் பிறகு நான் வடசென்னை, சார்பட்டா, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து அந்த படங்களும் வெளியில் வந்துவிட்டன. ஆனால் தற்போதுதான் முந்திரிக்காடு படம் வெளிவந்துள்ளது.

 

3.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்தது பற்றி உங்களது அனுபவம்?

 ஜெயிலர் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான, அதேநேரத்தில் சங்கடமான ஒரு அனுபவம். நான் முதலில் கமிட் ஆகும்போது சூப்பர் ஸ்டாருடன் வரும் ஒரு காட்சியில்தான் நடித்தேன். சில காரணங்களால் படத்தில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும் மறுபடியும் என்னை அழைத்து வில்லனுடன் வருவதுபோல ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். ரஜினி சாரோடு நடிக்க போகிறேன் என்றபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக சென்றேனோ திரைப்படத்தில் அந்த காட்சி இல்லை என்று தெரிந்தவுடன் அதே அளவிற்கு வருத்தமும் வந்துள்ளது. ஆனால் என்றைக்காவது ஒருநாள் ரஜினி சாரோடு சேர்ந்து திரையில் தோன்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

 

4.நடிப்புதான் உங்கள் தொழிலா? உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல முடியுமா?

 நான் ஒரு பி.இ., எம்.பி.ஏ., பட்டதாரி. ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்தில் மென்பெருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன். சினிமா எனக்கு பிடித்த விஷயம். சினிமா நடிக்க வேண்டும் என்பது எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்த ஆசை. ஆனால் இப்போது எனக்கு பிடித்த விஷயத்தையே எனது தொழலாக மாற்றிக்கொள்ள நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்போது எனக்கு சினிமா நிரந்தரமான வருமானம் கொடுக்கிறதோ, அப்போது சினிமாவையே நிரந்தரமான தொழிலாக மாற்றிக்கொள்வதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் சினிமாவை விடமாட்டேன். என்ன இருந்தாலும் சினிமாதான் உயிர்மூச்சு.

 

5.உங்களை சினிமா துறையை நோக்கி நகர்த்தியது எது?

என்னை சினிமாவை நோக்கி நகர்த்தியது இரண்டு விஷயங்கள் ஒன்று எனக்கு நிறைய கதாப்பாத்திரங்களாக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. ஒரு காவல் அதிகாரியாக, ஒரு ரவுடியாக இன்னும் பல கதாபாத்திரங்களாக வாழ ஆசை. ஆனால் இந்த பிறவியில் ஒரு கதாப்பாத்திரமாக தான் வாழ முடியும். ஆனால் சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரமாக வாழலாம். சினிமாதான் அதற்கான இடமாகவும் உள்ளது.

 இரண்டாவது விஷயம் சினிமா ஒரு மிகப்பெரிய கலை வடிவம். எனக்கு கலைசார்ந்த துறையிலிருந்து சிறப்பாக செயல்பட்டு மக்கள் போற்றும் ஒரு கலைஞன் ஆக வேண்டும் என்பது சிறுவயது முதலே இருந்த ஆசை. இந்த இரண்டு விஷயம்தான் என்னை சினிமாவிற்குள் கொண்டு வந்தது.

 

6.தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு பஞ்சம் இருப்பதாக பேசப்படுகிறது அது பற்றி உங்கள் கருத்து?

 கட்டாயமாக இருக்கிறது. நீங்கள் கேட்ட முதல்  கேள்வியில் ஹூரோவாக நடிக்காமல் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீரகள் என நீங்கள் கேட்கும்போது, வில்லன் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் எனக் கூறி இருந்தேன். அந்த காலத்தில் இருந்த நம்பியார் முதலாக ரகுவரன், பிரகாஷ்ராஜ் என இப்போது சமீப காலத்தில் ஆர்.கே.சுரேஷ், எஸ்.ஜே.சூர்யா என வில்லன் நடிகர்கள் மிகக்குறைவு. இந்த காரணத்தால்தான் ஹீரோவாக நடித்து அரவிந்த் சாமி போன்ற வெற்றி பெற்ற ஹீரோக்கள் கூட தற்காலத்தில் வில்லனாக நடித்து வருகின்றனர். இன்றுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரகுவரனை விட்டால் சிறந்த வில்லன் நடிகர் எவரும் கிடைக்கவில்லை. ரஜினி சாருக்கு வில்லன் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது ரகுவரன்தான் அப்படி ஒரு தடத்தை ரகுவரன் நமக்கு பதித்துவிட்டார். எனக்கும் அவரை போன்ற வில்லன் நடிகராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது.

 

7.சினிமா துறையை தேர்ந்தெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு உங்களது அறிவுரை என்னவாக இருக்கும்?

 சினிமா துறையை யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதில் வெற்றி பெற மிகுந்த முயற்சியும், உழைப்பும், பொறுமையும் தேவை. தற்கால இளைஞர்கள் சினிமாவிற்கு வர ஆசைப்படுகிறார்கள். ஆனால் எந்த பாதையின் வழியாக வரவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

 நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைபட்டால் மட்டும் போதாது. அதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் நீச்சலடிப்பேன், குதிரை சவாரி செய்வேன், சினிமா சண்டை காட்சிகளுக்கான முறையான பயிற்சியை பெற்றிருக்கிறேன், வசனங்கள் பேசுவதற்கான பயிற்சி, கிளிசரின் இல்லாமல் அழுவதற்கான பயிற்சி, கேமராவிற்கு முன்னால் பதட்டமில்லாமல் நடிப்பதற்கான பயிற்சி என இது போல என்னை நான் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னை தீடீரென அழைத்து ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்தால் அதில் நடிப்பதற்கு என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு அந்தந்த இயக்குநருக்கு ஏற்றார் போல நடிப்பது. மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வது எல்லாம் அடுத்தக்கட்டம். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது அதனை செய்யக்கூடிய அளவிற்கு என்னை தயார் நிலையில் வைத்து இருக்கிறேன். ஒரு நடிகர் என்பவர், ஒரு கத்தியை எப்படி கூர் தீட்டி வைத்திருக்கிறோமோ? அதுபோல தன்னை தயார் படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு இயக்குநாராக விருப்பப்பட்டால் நீங்கள் சினிமா இயக்குவதை பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது 100 புத்தகங்களையாவது வாசிக்க வேண்டும். இது போல சினிமாவின் அந்த பிரிவுக்கு ஏற்றார்போல தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். வளரும் இளைஞர்கள் சினிமாவில் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் அதற்காக அவர்கள் தங்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வெறும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு சினிமாவிற்குள் நுழைந்தால் வாய்ப்பு கிடைக்குமே தவிர அதை தக்க வைக்க முடியாது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!