ஒன்றிய அரசு பாசிச போக்கை கைவிட வேண்டும்..! ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021-க்கு உதயநிதி எதிர்ப்பு..!

படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது புதிய சட்ட வரைவு..!

ஒன்றிய அரசு பாசிச போக்கை கைவிட வேண்டும்..! ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021-க்கு உதயநிதி எதிர்ப்பு..!
சினிமா துறையில் பேரிடியாக விழுந்துள்ளது இந்த புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை மீண்டும் தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய அரசால் அமைக்கப்படும் குழுவுக்கு அளிக்கப்படுகிறது. தீர்ப்பாயம் கலைக்கப்படும், இந்த குழுவால் அளிக்கப்படும் முடிவினை நீதிமன்றம் சென்று கூட தீர்க்க முடியாது. குழுவின் முடிவே இறுதியானது உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த புதிய சட்ட வரைவு

இதற்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். மூன்று குரங்குகளை போல கண், காது, வாயை பொத்திக் கொண்டு திரைத்துறை இருக்காது என உலக நாயகன் கமல்ஹாசனும், சட்டம் மக்களை காக்க தான் வேண்டும், குரல்வளையை நெறிக்கக் கூடாது என நடிகர் சூர்யாவும் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று கவுதம் வாசுதேவ்மேனன், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்புகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், எம்.ல்.ஏவுமான உதயநிதியும் இந்த புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த புதிய வரைவு படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிப்பதாகவும், தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

நடிகர்கள், இயக்குநர்கள் இத்தகைய எதிர்ப்பு பதிவுக்கு பாஜக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம், சூர்யாவிற்கும், கார்திக் சுப்புராஜூக்கும், ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார். நடிகர், இயக்குநருக்கே இத்தகைய பதிலடி என்றால், ஒரு எம்.எல்.ஏ, கட்சி தலைவரின் மகனுக்கு பாஜக ஆதரவாளர்களின் பதில் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..