கோவை கார் வெடி விபத்தில் ஆளுநருக்கு தொடர்பா? திமுக தொண்டர் பதிவிட்ட சர்ச்சை வீடியோ!!

கோவை கார் வெடி விபத்தில் ஆளுநருக்கு தொடர்பா? திமுக தொண்டர் பதிவிட்ட சர்ச்சை வீடியோ!!
Published on
Updated on
2 min read

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில்,  கார் வெடித்து சிதறியதில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

யார் அந்த ஜமேஷா முபின்?:

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது. ஏற்கெனவே இவர் தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையில் தொடர்புடையவர் என காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அம்ஜத் அலி என்பவரை கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறைக்கு சென்று சந்தித்ததும் தெரியவந்தது. 

சந்தேகம் எழுந்த காரணம்:

அவரை சந்திக்க சென்ற போது சிறைச்சாலையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு இருப்பது மூலம் இது உறுதி செய்யப்பட்டது.  மேலும்  2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் என்பவரை ஜமேஷா முபின் பார்க்க முற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அண்ணாமலை கருத்து:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை உக்கடத்தில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபின் இறப்பதற்கு முன் அவரது  செல்போனில் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருவேளை இருக்குமோ?:

இந்த பின்னணியில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளரான இசை என்பவர் காதலன் படத்தின் ஆளுநராக நடித்தவர் மற்றொருவரோடு உரையாடும் காட்சியை இணைத்து, இந்த படத்தில் இடம் பெற்ற வசனம் போன்ற சூழல் கோவை கார் வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடையதாக இருக்குமோ? என்ற பொருள்படும் படி பதிவிட்டு சந்தேகத்துக்குரிய ஸ்மைலியையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த திரைப்படக் காட்சி:

காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியில் ஆளுநராக நடித்திருந்த நடிகர் காசியில் திதி கொடுத்துக்கொண்டிருப்பார். அப்போது, காவி உடை அணிந்திருந்த ஒரு நபர் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அவரோடு உரையாடுவார். வந்திருந்த நபர் ஆளுநரிடம் உங்கள் மாநிலத்தின் ஆட்சி பிடிக்கவில்லை எனவும் அதைக் கலைக்க எம்எல்ஏக்களை கலைக்க கொடுத்த 80 கோடி ரூபாய் எங்கே எனக் கேட்கிறார்.  அதற்கு அந்த நபர் கலவரம் ஏற்பட்டாலும் ஆட்சியை கலைக்க முடியும் எனக் கூறுகிறார்.  அது எப்படி முடியும் என வந்திருந்த நபர் கேட்க வெடிகுண்டு வெடித்தால் நிச்சயமாக கலவரம் ஏற்படும் எனக் கூறுவார் அந்த ஆளுநர்.  அது எப்படி முடியும் எனக் கேட்க மார்க்கெட் காம்ப்ளக்ஸ்ல குண்டு வெடிச்சதுக்கு காரணமே நான் தான் எனக் கூறியிருப்பார்.  அதற்கு காரணமாக மதக் கலவரங்களை காரணம் காட்டலாம் என ஐடியாவும் குடுத்திருப்பார் காக்கர்லா சத்தியநாராயணன் என்ற அந்த ஆளுநர்.

சந்தேகத்தை எழுப்பிய கண்டனம்:

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக தொழில்நுட்ப அணியின் தலைவர் நிர்மல் குமார், “ தமிழ்நாடு ஆளுநருக்கு கோவை சிலிண்டர் வெடிப்பில் தொடர்பு உள்ளதாக திமுக கட்சியின் தொண்டர் இசை என்பவர் பதிவிட்டுள்ளார்.  இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் விஷயங்களை திமுக கட்சி கையாளும் விதம் இதுதானா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும்,” திமுகவை சேர்ந்தவர்களும் இன்னும் சிலரும் ஆளுநர் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறிவருகின்றனர்” என என்ஐஏ இந்தியாவிற்கு டிவிட்டரில் செய்தி கூறியுள்ளார் பாஜகவின் மாநில தொழில்நுட்ப தலைவர் நிர்மல்குமார்.

இந்த ட்விட்டருக்கு பாஜக பதிலளித்ததை பார்க்கையில் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com