மேலோங்கிய காங்கிரஸ் கை...பனியில் மூழ்கிய தாமரை...!

மேலோங்கிய காங்கிரஸ் கை...பனியில் மூழ்கிய   தாமரை...!

இமாச்சலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி கனியை 
சுவைத்த காங்கிரஸ்...!

இமாச்சல பிரதேச தேர்தல்:

இமாசலப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

முன்னிலையில் காங்கிரஸ்:

இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஆட்சியைப் 
பிடிக்க கட்சி பெரும்பான்மையாக 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், 
அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் வந்தது. பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் 35 தொகுதிகளைத் தாண்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

ஆனால், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக 30-தை தாண்டவே திணறி வந்தது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் ஏறு முகத்தை கொண்டுள்ள காங்கிரஸ் தான் வெற்றி பெரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இதனிடையே தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததாகக் கூறி கட்சித் தலைவர்கள் 30 பேரை காங்கிரஸ் தலைமை அதிரடியாக நீக்கியிருந்தது.

பின்னடைவை சந்தித்த ஆம் ஆத்மி:

மேலும், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இணையாக தேர்தலில் களம் இறங்கிய ஆம்ஆத்மி எந்த  தொகுதியிலும் முன்னிலை பெறாமல் பெரும்  பின்னடைவை சந்தித்துள்ளது சமீபகாலமாக ஆம் ஆத்மிக்கு கிடைத்த அபரிவிதமான தொடர் வெற்றியால் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி புது வெற்றியை பதிக்கும் என்று அரசியல் அரங்கில் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி 
மிகப்பெரிய பின்னடைவையே சந்தித்து வந்துள்ளது. 

ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்?:

இதற்கிடையில் சிராஜ் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாகூர், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், தொடர் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ்க்கும், 
பாஜகவுக்கும் இழுபறி நீடித்து வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

வெற்றி கனியை சுவைத்த காங்கிரஸ்:

இந்நிலையில் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை தாண்டி 39 இடங்களை கைப்பற்றி, ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை பிடித்து வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. என்னதான் குஜராத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் 
சந்தித்தாலும் இமாச்சலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளது. பெரிய சரிவை சந்தித்திருந்த காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றியானது ஒரு ஏறுமுகமாகவே அரசியல் 
அரங்கில் கருதுகின்றனர்.

இதனிடையே, இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.