தொடரும் மரணங்கள்... முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?!!

தொடரும் மரணங்கள்... முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?!!
Published on
Updated on
1 min read

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.  உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான ஏற்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நடப்பது ஏன்? இது தொடர்பான தகவல்களை காணலாம் இந்த செய்தித் தொகுப்பில்.. 

குறுக்கு வழி:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.  குறைந்த வருமானத்தால் குடும்பம் நடத்த முடியாத குணசீலனுக்கு குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என்ற ஆசையும் முளைத்துள்ளது. 

அதற்கான வழி:

இதனால் என்ன செய்யலாம் என ஆலோசனையில் இறங்கியவர், ஆன்லைன் ரம்மி விளம்பர மோகத்தில் விழுந்தார். இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் ரம்மியில் விளையாடி வந்தவருக்கு முதல் வருடத்தில் கை மேல் பலன் கிடைத்துள்ளது. 

மீட்டாக வேண்டும்:

ஜெயித்த பணத்தை மீண்டும் அதிலேயே முதலீடு செய்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக வருமானம் இல்லாமல் போனது.  விட்ட பணத்தை மீண்டும் பெற்றே ஆக வேண்டும் என நினைத்த குணசீலன், நண்பர்களிடத்தில் 5000, முதல் 20 ஆயிரம் வரை பணம் வாங்கியுள்ளார். 

தொடர் தோல்வி:

ஆனால் ரம்மியில் தொடர் தோல்வியையே சந்தித்தவர் லட்சக்கணக்கில் கடனில் மூழ்கி மீள முடியாத நிலைக்கு சென்றார். பின்னர் குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் திணறிப்போன குணசீலன் மதுரை ஓட்டலில் வேலை செய்து வந்தார். 

ஓட்டல் அறையில்:

இந்நிலையில் ஓட்டல் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மனஉளைச்சலுக்கு ஆளான இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கெனவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் இந்த தற்கொலை பட்டியலில் குணசீலனும் இணைந்துள்ளார். 

தொடரும் முயற்சிகள்:

கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் ரம்மிக்கான தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததாலும் தற்போது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கான மசோதாவும் காலாவதியாகி விட்டது. 

முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?:

உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு மத்திய அரசு வரியைத்தான் புகுத்துகிறதே தவிர, சாமானிய மக்களின் வலியை புரிந்து கொள்வது எப்போது? இவ்வாறான தொடர் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com