குழந்தையை அடித்த கொடூரத்தாய் செய்தது தவறு என்றால், தந்தை செய்தது சரியா? அல்லது இந்த சமூகம் செய்தது சரியா?  

குழந்தையை அடித்த கொடூரத்தாய் செய்தது தவறு என்றால், தந்தை செய்தது சரியா? அல்லது இந்த சமூகம் செய்தது சரியா?  என்பது தொடர்பான கேள்விக்கு வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் கருத்தை தற்போது படிக்கலாம்...

குழந்தையை அடித்த கொடூரத்தாய் செய்தது தவறு என்றால், தந்தை செய்தது சரியா? அல்லது இந்த சமூகம் செய்தது சரியா?  

இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது…கைதும் தண்டனையும் சரி!!

தண்டனை மட்டுமே தீர்வா? திருந்தாத சமூகத்திற்கு யாரை தண்டிப்பது?

குழந்தையை கொடூரமாக ஒரு அம்மா அடித்தார் என்ற செய்திக்கு இந்த மொத்த சமூகமும் அப்பெண்ணை “நீயெல்லாம் ஒரு மனுஷியாஎன்று திட்டி தீர்ப்பதை பார்க்கிறோம். 

 1. அந்த பெண்ணுக்கு இப்போது 22 வயது என கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு திருமணம் நடத்திருக்கிறது. அப்போது அவர் வயது 17 இருந்திருக்கும். 
 1. பதினேழு வயதில் ஒரு பெண் திருமணத்துக்கு உடல் அளவிலோ மனதளவிலோ தயாராய் இருந்திருப்பாரா ? 
 1. அவர் கணவனின் தற்போதைய வயது 37. திருமணம் ஆகும் போது 32. பதினேழு வயது பெண்ணுக்கும் 32 வயது ஆணுக்கும் திருமணம் என்பது என்பது எந்த வகையில் நியாயம். அப்பெண் விருப்பப்படிதான் திருமணம் நடந்ததா? கணவர் குடிகாரறா  தெரியவில்லை, அந்தப் பெண் இல்லற வாழ்வு எப்படி இருந்தது என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
 1. Early marriage கட்டாயப்படுத்தப்படும், திணிக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன திணறல்கள் பற்றி நாம் அறிவோமா. 
 1. மனம் மற்றும் உடல் உறவுக்கு தயாராகாமல் இருக்கும் போது நடக்கும் முதலிரவினால் பெண்ணுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு சார்ந்த வலிகளும் அது கொடுக்கும் மன அழுத்தமும் பற்றி எல்லாம் நாம் அறிவோமா?

 1. அப்பெண்ணின் முதல் மகனின் வயது 4. அப்படியானால் திருமணம் ஆன உடன் கருத்தரித்திருக்கிறார். பதினெட்டு வயதில் கருத்தரிக்கும் ஒரு சிறுமின் மனநிலை பற்றி நாம் அறிந்தோமா? 
 1. குழந்தை பிறந்த உடன் அப்பெண்ணுக்கு Postpartum depression பற்றியெல்லாம் சொல்லி யாராவது விழிப்புணர்வு கொடுத்தார்களா? 
 1. இரண்டாவது குழந்தைக்கு வயது 2 . அக்குழந்தையை அப்பெண்ணின் முழு மனதோடுதான் பெற்று கொள்ள அவர் குடும்பத்தினர் சொன்னார்களா? அதில் அவருக்கு சம்மதம் இருந்ததா? 
 1. கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு என்றதும் இரண்டு குழந்தைகளையும் அப்பெண்ணிடமே விட்டு சென்று விட்டார் கணவர். அக்குழந்தைக்கு அம்மா மட்டும்தான் பொறுப்பா. அப்பா இல்லையா ? 
 1. பதினேழு வயதில் திருமணம் செய்து நான்கு வயது குழந்தை ஒன்றையும் இரண்டு வயது குழந்தை ஒன்றையும் பெற்று பராமாரிப்பதன் பின்னால் இருக்கும் தொனதொனப்பு, நிம்மதியின்மை, எரிச்சல், மன அழுத்தம் பற்றி நாம் யாராவது அறிந்து வைத்திருக்கிறோமா?

 1. தமிழ்நாட்டு சிறுமிகளில் 8.39 % சிறுமிகளுக்கு பதினெட்டு வயதுக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து விடுகிறது என்கிறது புள்ளி விபரம்.
 1. தமிழ்நாட்டில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை தோராயமாக ஒரு கோடி. அதில் 8.39 % எவ்வளவு வரும் எண்ணி பாருங்கள். 
 1. தமிழ்நாட்டில் 14 - 19 வயதுவரை இருக்கும் பெண்களின் எண்ணிக்கை முப்பது லட்சம். அதில் 8.39 % எடுத்தால் கூட 2.5 லட்சம் வருகிறது. 
 1. அதாவது 2011 ஆண்டு கணக்கு படி மிக குறைந்தபட்சம் மூன்று லட்சம் சிறுமிகள் திருமணத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 
 1. மூன்று லட்சம் பேர் விருப்பத்துக்கு மாறாக திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, உடலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, கர்ப்பத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, குழந்தைகளை அவர்கள் மேல் திணித்து, தாய்மை தாய்மை என்று திணிக்கப்பட்டு, உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்தரவதை செய்யப்பட்டு இருக்கின்றனர். 
 1. 2021 ஆம் ஆண்டு வரை இங்கே Early Marriages என்னும் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. 
 1. ஏழ்மை இருக்கும்வரை திருட்டு இருக்கும். ஆகையால் திருட்டு சரி என்பதான வாதமல்ல இது. திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட பாலினத்தார் மீது குழந்தை பருவத்திலேயே திணிக்கப்படும் குழந்தை வளர்ப்பு என்ற கொடுமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் அங்கொன்றும் இங்கொன்றும் தனிமனிதர்கள் காட்டும் விளைவை மட்டும் திட்டி தீர்த்தல் தவறு என்பதை சுட்டிக்காட்டும் வாதமிது. 
 1. குழந்தை திருமணம் இவ்வளவு தீவிரமாக நடக்கும் தமிழ்நாட்டில் இளம்தாய்மார்களின் இது போன்ற குற்ற செயல்களை அப்படியே மன்னித்து அவர்களுக்கு ஆரோக்கியமுறையிலான மனநல சிகிச்சை அளிப்பதே சரியான விஷயமாகும். 
 1. ஒரு குழந்தையை அடித்து அது வீடியோவாக வந்ததால் நமக்கெல்லாம் தெரிந்து கொதிக்கிறோம். ஆனால் மூன்று லட்சம் அம்மாக்களின் குழந்தைகளும் பல்வேறு சந்தர்ப்பத்தில் இது போல அடிவாங்கிருக்கும்தானே. 
 1. அப்படி அந்த குழந்தைகள் அடிவாங்குவதற்கு காரணம் அந்த அம்மாக்களா ? அல்லது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட பாலியல் சித்தரவதை குழந்தை திருமணங்களா ? சரியாக தூங்கவிடாமல் இரண்டு குழந்தைகள் வீட்டின் குறுக்கேவும் நெடுக்கேவும் ஒரு 22 வயது பெண்ணை தொடர்ச்சியாக தொந்தரவு செய்யும் காட்சிகளை நினைத்து கொள்ளுங்கள். உங்களை அந்த இளம்பெண் அம்மாவாக நினைத்து கொள்ளுங்கள். அவராய் வாழ்ந்து பாருங்கள். அவர்களின் மன அழுத்தம் புரியும். இப்பிரச்சனையை ஒரு தனிமனித கோணல், தனிமனித பிறழ்வு என்று கடந்து செல்வது மிகத் தவறான பார்வையாகும்.