தேமுதிகவின் பரிதாப நிலை.! மொத்தமாக தாவும் மா.செக்கள்.! எல்லாத்துக்கும் காரணமே இவங்க ரெண்டு பேரு தான்,..

தேமுதிகவின் பரிதாப நிலை.! மொத்தமாக தாவும் மா.செக்கள்.! எல்லாத்துக்கும் காரணமே இவங்க ரெண்டு பேரு தான்,..

ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள் இருந்தார்கள் தெரியுமா? இப்போ இப்படி ஆகி விட்டார்கள்.! என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அரசியல் ரீதியாக அதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது தேமுதிக. காரணம் ஒரு காலத்தில் அப்படி இருந்த கட்சி அது. தான் எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்டு 8.4% வாக்குகளை பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

அதன்பின் ஐந்து ஆண்டுகள் அக்கட்சியின் பொன்னான நாட்கள் என்றே சொல்லலாம். 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.09% வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டிட்டு 7.88% வாக்குகளை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 29 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றார்.

இப்படி அரசியல் காலத்தில் வேறு லெவலில் பயணித்த தேமுதிகவின் வளர்ச்சி அதன் தலைவர் விஜயகாந்த்தின் உடல்நல பிரச்சனைகளால் சரிவை நோக்கி பயணித்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் கூட தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர கருணாநிதி முயற்சித்தபோது மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அந்த தேர்தலில் தன் பலத்தை இழந்து வெறும் 2.41% வாக்குகளையே பெற்றது. அதாவது 7 ஆண்டுகளில் சுமார் 8% வாக்குவங்கியை அந்த கட்சி இழந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலம் சரியில்லாமல் போக கட்சி முழுக்க முழுக்க விஜயகாந்த் மனைவியான பிரேமலதா கையிலும்,அவரது தம்பி சுதீஷ் கையிலும் போனது. இவர்கள் தலைமை பிடிக்காமல் பலர் தேமுதிகவிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்தனர். 


2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேமுதிக ஓரளவு வலிமையாகவே காட்சியளித்தது. ஆனால் ஒரே நேரத்தில் திமுக,அதிமுக என இரு கட்சிகளிடையே பேரம் பேசியதை திமுக தலைமை பகிரங்கமாக வெளியிட அதுவரை தேமுதிகவுக்கு இருந்த மக்கள் ஆதரவு கூட இல்லாமல் போனது. மேலும் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சி என்றும், பணத்துக்காக பேரம் பேசும் கட்சி என்ற பொதுப்பார்வை மக்களிடையே உருவானது. 

இதன் காரணமாக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுக என இரு கட்சிகளும் தேமுதிகவை கண்டுகொள்ளவேயில்லை. இந்த சூழலில் தங்கள் கட்சியின் வாக்குசதவீதம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்ததை கூட உணராமல் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் பேசியது கூட்டணி கட்சிகளிடையே  கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. 

2021 தேர்தலில் கூட திமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்றே தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் இது பற்றி பிரேமலதாவோ அல்லது  சுதீஸோ இதை ஏற்காமல் அதிக இடம் கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று சொல்லி கட்சி நிர்வாகிகள் பேச்சை கேட்காமலே முடிவெடுத்துள்ளார்கள் என்று அப்போது கூறப்பட்டது. அவர்களின் இந்த தன்னியல்பான முடிவின் காரணமாகவே தேமுதிகவுக்கு இந்த நிலை என்று சமூகவலைத்தளங்களில் கூட பேச்சு எழுந்தது. மேலும் சிலர் விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? என்றும், அக்காவும்(பிரேமலதா) தம்பியும் (சுதீஷ்) சேர்ந்த கட்சியை நாசம் செய்து விட்டார்களே! என்று விஜயகாந்த் ரசிகர்கள் கொத்தித்துள்ளனர். 

இந்த நிலையில் தான் 2021 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்பப்பட்டியலை தாக்கல் செய்யலாம் என தேமுதிக தலைமை அறிவித்தது. ஆனால் 234 தொகுதிகளுக்கு கூட விருப்பப்பட்டியல் தாக்கல் செய்ய ஆள் இல்லாமல் கஷ்டப்பட்டது. இந்த தகவல் வெளியே செல்லக்கூடாது என்று பிரேமலதாவே நிர்வாகிகளை அழைத்து விருப்பமனு தாக்கல் செய்யசொன்னதாகவும் கூறப்பட்டது. 

இந்த விவகாரங்கள் வெளியே தெரிந்தததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தேமுதிகவை  கூட்டணியில் சேராமல் கழட்டிவிட வேறு வழியே இல்லாமல் தினகரனின் அமமுக கூட்டணியில் இணைந்தது. கூட்டணி நேர்ந்த பின் அமமுக சார்பில் தேர்தல் செலவுகளுக்காக தேமுதிகவுக்கு பணம் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டது. மேலும் அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

அந்த 60 இடங்களுக்கு கூட வேட்பாளர் கிடைக்காமல் திணறிய தேமுதிக கடைசியாக விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வேட்பாளர்களாகியது. அவர்களை வேட்பாளர்களாக்கிய போதே அவர்களிடம் தேர்தல் செலவுகளுக்கு கட்சி நிதி ஒதுக்கும் என்று கூறியது. அதை நம்பியே பலர் வேட்பாளராகினர். கட்சி தலைமை கொடுக்கும் என்று நம்பி தங்கள் சொந்த பணத்தை செலவு செய்துள்ளார்கள். இந்த வேட்பாளர்களில் பலர் பணபலம் இல்லாத சாமானியர்களே. 

அதிலும் குறிப்பாக திருப்பூரை சேர்ந்த முத்து வெங்கடேசன் தேர்தல் செலவுகளுக்காக பல லட்சங்களை செலவு செய்திருக்கிறார். மேலும் கட்சி மாநாடுகளை நடத்தி அதற்கும் முழு பொறுப்பை ஏற்றுள்ளார். இவரும் கட்சி தலைமையிலிருந்து பணம் வரும் வரும் என்று எதிர்பார்த்து கடைசி வரை ஏமார்ந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அதிமுகவில் இணைந்துவிட்டார். இவரை விட பலர் மோசமான நிலையில் தான் தேமுதிகவில் இருக்கிறார்கள். அமமுக கொடுத்த காசு என்ன ஆனது என்றே தேமுதிக தலைமை இறுதி வரை சொல்லவில்லை என்று கொதிக்கிறார்கள் தேமுதிகவினர். 

இனியும் தேமுதிகவில் இருந்தால் நமக்கு எந்த எதிர்காலமும் இருக்காது என்று அதன் நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும், சென்னையை சேர்ந்த இரு முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும், கொரோனா முடிந்த பின் தேமுதிக கூடாரமே  காலியாகிவிடும் என்றும் கூறுகிறார்கள். இதைத் தடுக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தே சில நிர்வாகிகளிடம் நேரடியாக பேசியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசும் வகையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த தேமுதிக தலைமை முடிவெடுத்து  தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த் பெயரில் நேற்று (ஜூன் 10) அவசரமாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் , “தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும்,கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்,

இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாசெக்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கும் விஜயகாந்த் மேலும்,

“இதுபோன்ற நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்க விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் தேமுதிக தலைமையகத்தில் நடக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எத்தனை நிர்வாகிகள் பங்கெடுப்பார்கள் என்று தேமுதிக தலைமைக்கே சந்தேகம் இருப்பதாகவும், ஒரு 50,60 பேர் பங்கேற்றால் கூட அது தேமுதிகவின் சாதனையாக இருக்கும் என்றே தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.