பழைய நண்பர் விஜயகாந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்.,தேமுதிகவுக்கு எம்.பி சீட் கன்பார்ம்.!

பழைய நண்பர் விஜயகாந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்.,தேமுதிகவுக்கு எம்.பி சீட் கன்பார்ம்.!
Published on
Updated on
4 min read

ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள் இருந்தார்கள் தெரியுமா? இப்போ இப்படி ஆகி விட்டார்கள்.! என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அரசியல் ரீதியாக அதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது தேமுதிக. காரணம் ஒரு காலத்தில் அப்படி ஓஹோவென்று இருந்த கட்சி அது. இத்தனைக்கும் தான் எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்டு 8.4% வாக்குகளை பெற்றது. அதோடு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

அதன்பின் ஐந்து ஆண்டுகள் அக்கட்சியின் பொன்னான ஆண்டுகள் என்றே சொல்லவேண்டும். 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.09% வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெற்ற தேமுதிக, அதன் தொடர்ச்சியாக 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டிட்டு 7.88% வாக்குகளை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த தேர்தலில் 29 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றார்.

இப்படி அரசியல் காலத்தில் வேறு லெவலில் பயணித்த தேமுதிகவின் வளர்ச்சி அதன் தலைவர் விஜயகாந்த்தின் உடல்நல பிரச்சனைகளால் சரிவை நோக்கி பயணித்தது. 2016 சட்டமன்ற தேர்தலில்  தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர கருணாநிதி முயற்சித்த நிலையில் இனி நாங்கள் கிங் மேக்கர் அல்ல, கிங் என்று சொல்லி மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக. ஆனால் அதிர்ச்சிகரமான அந்த தேர்தலில் தன் பலத்தை இழந்து வெறும் 2.41% வாக்குகளையே பெற்றது. அதாவது 7 ஆண்டுகளில் சுமார் 8% வாக்குவங்கியை அந்த கட்சி இழந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலம் சரியில்லாமல் போக கட்சி முழுக்க முழுக்க விஜயகாந்த் மனைவியான பிரேமலதா கையிலும்,அவரது தம்பி சுதீஷ் கையிலும் போனது. இவர்கள் தலைமை பிடிக்காமல் பலர் தேமுதிகவிலிருந்து விலகி பிற கட்சிகளிலும் இணைந்தனர். 

இத்தனைக்கும் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேமுதிக ஓரளவு வலிமையாகவே காட்சியளித்தது. ஆனால் ஒரே நேரத்தில் திமுக,அதிமுக என இரு கட்சிகளிடையே பேரம் பேசியதை திமுக தலைமை பகிரங்கமாக வெளியிட அதுவரை தேமுதிகவுக்கு இருந்த மக்கள் ஆதரவு கூட இல்லாமல் போனது. மேலும் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சி என்றும், பணத்துக்காக பேரம் பேசும் கட்சி என்ற பொதுப்பார்வை மக்களிடையே உருவானது. 

இதன் காரணமாக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுக என இரு கட்சிகளும் தேமுதிகவை கண்டுகொள்ளவேயில்லை. இந்த சூழலில் தங்கள் கட்சியின் வாக்குசதவீதம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்ததை கூட உணராமல் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தங்களை இன்னும் கிங் மேக்கர் என்று நினைத்து பேசியது அதன் கூட்டணி கட்சிகளிடையே  கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மேலும் கடந்த 2021 தேர்தலில் கூட திமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்றே தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் இதை பிரேமலதாவோ அல்லது  சுதீஸோ ஏற்காமல் அதிக இடம் கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று சொல்லி கட்சி நிர்வாகிகள் பேச்சை கேட்காமலே முடிவெடுத்துள்ளார்கள் என்று அப்போது கூறப்பட்டது. அவர்களின் இந்த தன்னியல்பான முடிவின் காரணமாகவே தேமுதிகவுக்கு இந்த நிலை என்று சமூகவலைத்தளங்களில் கூட பேச்சு எழுந்தது. மேலும், விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? என்றும், அக்காவும் தம்பியும் சேர்ந்த கட்சியை நாசம் செய்து விட்டார்களே! என்று விஜயகாந்த் ரசிகர்கள் கொதித்தனர்.

இந்த நிலையில் தான் 2021 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்பப்பட்டியலை தாக்கல் செய்யலாம் என தேமுதிக தலைமை அறிவித்தது. ஆனால் 234 தொகுதிகளுக்கு கூட விருப்பப்பட்டியல் தாக்கல் செய்ய ஆள் இல்லாமல் அக்கட்சி ரொம்பவே கஷ்டப்பட்டது. இந்த தகவல் வெளியே செல்லக்கூடாது என்று பிரேமலதாவே நிர்வாகிகளை அழைத்து விருப்பமனு தாக்கல் செய்யசொன்னதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

தேமுதிகவின் இந்த அவள நிலை வெளியே தெரிந்தததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தேமுதிகவை  கூட்டணியில் சேராமல் கழட்டிவிட்டன. இதனால்  வேறு வழியே இல்லாமல் தினகரனின் அமமுக கூட்டணியில் இணைந்தது. கூட்டணி நேர்ந்த பின் அமமுக சார்பில் தேர்தல் செலவுகளுக்காக தேமுதிகவுக்கு பணம் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டது. மேலும் அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

அந்த 60 இடங்களுக்கு கூட வேட்பாளர் கிடைக்காமல் திணறிய தேமுதிக கடைசியாக விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வேட்பாளர்களாகியது. எப்படியும் தோற்று போவோம், ஆனால் குறைந்தபட்சம் கௌரவமான வாக்குகளை பெறவேண்டும் என்று  போட்டியிட்ட தேமுதிக, மிக மோசமான வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தது. அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் கூட டெபாசிட் இழந்தார். 

இந்த தேர்தல்கள் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக தோல்வியை தழுவ முக்கிய காரணமாக இருந்தது தேமுதிக தான். இதன் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய தேமுதிக நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து தேமுதிகவையே காலி செய்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் நடந்தது அப்படியே வேறாக இருந்தது. 

திமுக வெற்றிபெற்றதும் சுதீஷிடமும், விஜயபிரபாகரனிடமும் விஜயகாந்த் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்றதும் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் விஜயகாந்த். அதைத் தொடர்ந்து நேரடியாக தனது மகனுடன் விஜயகாந்த் வீட்டிற்கே சென்று விஜயகாந்த் பற்றி நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின். 

அப்போது உங்கள் கட்சியை தான் அழிக்க விரும்பவில்லை என்று கூறிய ஸ்டாலின்.  உங்கள் உடல்நலமும், கட்சியும் முன்பு போல புது பொலிவுடன் வரவேண்டும் என்று கூறியவர், உங்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை கொடுக்கிறேன் என்று கூறி விஜயகாந்தை திகைக்கவைத்தார் மு.க.ஸ்டாலின். 

அதோடு, உங்கள் கட்சியில் இவருக்கு தான் எம்.பி பதவி கொடுக்கிறேன் என்று நான் சொல்லமாட்டேன். உங்கள் கட்சியில் நீங்கள் விரும்பும் நபருக்கே அதை கொடுக்கிறேன் என்று கூறியவர், நீங்கள் விவாதித்து சொல்லுங்கள், அவரையே மாநிலங்களவை எம்.பி ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். 

இது விஜயகாந்துக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்க இது பற்றி தன் குடும்பத்தினரோடு விதித்துள்ளார். விஜயகாந்தின் முதல் விருப்பமாக இருந்தது பிரேமலதா விஜயகாந்த் தான் என்றாலும், தன் உடல்நிலையை பார்த்துக்கொள்ள அவர் வேண்டும், அவர் டெல்லி சென்றால் அது சரியாக இருக்காது என்று முடிவெடுத்துள்ளார். 

அடுத்ததாக தன் மகன் விஜயபிரபாகரன் தான் தற்போது கட்சியில் அடுத்த தலைவராக உருப்பெற்று வருகிறார். ஆகவே அவர் இங்கு இருந்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று நினைத்து பிரேமலதாவின் தம்பியும் தேமுதிகவின் துணைச் செயலாளருமான எல்.கே.சுதீசை மாநிலங்களவை எம்.பி ஆக்கலாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்ததும் எது எப்படியோ தனக்கு பதவி கிடைத்தது மகிழ்ச்சி என்று ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தேமுதிக சுதீஷ்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com