தொகுதியில் கால் வைக்காத இடமே கிடையாது... எதிர் கட்சிகளே வியக்கும் ஒருவர்,..இப்படி ஒரு எம்.எல்.ஏ.வை தமிழகமே பார்த்ததில்லை.! 

தொகுதியில் கால் வைக்காத இடமே கிடையாது... எதிர் கட்சிகளே வியக்கும் ஒருவர்,..இப்படி ஒரு எம்.எல்.ஏ.வை தமிழகமே பார்த்ததில்லை.! 

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தமிழல்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுக ஆட்சிக்கு வந்தபோது தான் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சநிலையில் இருந்தது. இதன் காரணமாக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் பம்பரம் போல சுழன்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டார். 

முதல்வரே இப்படி இருக்கும் போது அமைச்சர்கள் சும்மாவா இருக்க முடியும்? அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தினர். இதன் காரணமாக திமுக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்தது. தமிழக அரசின் இந்த செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கூட வரவேற்றிருந்தார்கள். 

முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடுகள் இப்படி இருக்கிறது என்றால் அவர்களை விட கொரோனா காலத்தில் தீயாய் வேலைசெய்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் ஈர்த்துள்ளார். இவருக்கு தேர்தலில் சீட் கொடுத்தபோதே ஸ்டாலினின் மகன் என்பதால் சீட் கொடுக்கிறார்கள் என்றும், வாரிசு அரசியல் செய்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன் காரணமாக பிற எம்.எல்.ஏக்களை விட அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயம் உதயநிதிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி. 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற அன்றே தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து விட்டார் உதயநிதி. தொகுதியில் தெரு தெருவாக சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்ட அவர் கழிவுநீர், கழிப்பறை போன்ற சுகாதார பிரச்சனைகளில் வெறுமனே அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல் அந்த பகுதிக்கே சென்று அது சரி உடனே சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட பின்பே அங்கிருந்து செல்கிறார்.

சாக்கடை சூழ்ந்த இடம், பொது கழிப்பிடம் என்று அருவருப்பு படாமல் அந்த பகுதிக்கே சென்று செல்கிறார். சாக்கடை என்று கூட பார்க்காமல் அந்த பகுதிகளுக்கு சென்று அதை சரி செய்து வருவது  அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த சூழலில், அதிகாரிகளே கால் வைக்க தயங்கும் பகுதியில், மாநகராட்சி ஊழியர்களே உள்ளே வருவதற்கு தயங்கும் பகுதிகளுக்குள் அசால்டாக நடந்து சென்று உதயநிதி ஆய்வு செய்ததை குறிப்பிட்டு 'இதுவரைக்கும் இப்படி யாருமே இங்கே வந்தது இல்லை, நீங்கதான் முதல்முறையா இங்கே வந்திருக்கீங்க ரொம்ப பெருமையா இருக்கு சார்' என்று தொகுதி பெண் ஒருவர் கூறியது இணையத்தில் வைரல் ஆனது. 

 

அந்த பகுதியிலிருந்த அனைத்து சுகாதார மையத்துக்கும் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டதாக கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள். அதோடு இல்லாமல் இடுகாட்டில் ஆய்வு, மருத்துவமனை கழிவறையில் ஆய்வு, வார்ரூம்களில் ஆய்வு என தொகுதியில் அவர் ஆய்வு செய்யாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி. ஆய்வோடு நிற்காமல் தொகுதி மக்களுக்காக நலதிட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இது அனைத்துமே தொகுதி மக்களால் பாராட்டப்படுகிறது. 

பொதுவாக எதிர்க்கட்சிகள் தொடங்கிய திட்டங்களை ஆளும் கட்சியினர் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினோ தொகுதியில் இருக்கும் அம்மா உணவகங்களுக்கு திடீர் விசிட் அடித்து அங்கு வழங்கப்படும் உணவுகளை உண்டும் ஆய்வு செய்கிறார். இந்த செயல் அதிமுகவினரால் கூட பாராட்டப்படுகிறது. 

இந்நிலையில், திடீரென்று திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனை செவிலியர்கள் பத்திரமாக மீட்டனர். சம்பவம் அறிந்ததும் அமைச்சர் சேகர் பாபுவோடு அங்கு விரைந்த உதயநிதி மருத்துவமனையை பார்வையிட்டனர். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து மருத்துவமனை கேட்ட உதவிகளையும் உடனடியாக நிறைவேற்றினர். 

இப்படி தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற்றுவரும் உதயநிதிக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்றை கொடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சியில் பொறுப்பு கொடுத்தால் அது சர்ச்சையாகும் என்பதால் அமைச்சர் பதவி கொடுக்காமல் கட்சியில் ஒரு சிறப்பான பதவி விரைவில் உதயநிதிக்கு வழங்கப்படும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.