பாலாஜி,வேலு,பாஸுவை தூக்க டீம் ரெடி... மெயின் தல எடப்பாடிக்கும் ஸ்கெட்ச்!! அதிகாரிகள் அலர்ட், அலறும் அதிமுக.! 

பாலாஜி,வேலு,பாஸுவை தூக்க டீம் ரெடி... மெயின் தல எடப்பாடிக்கும் ஸ்கெட்ச்!! அதிகாரிகள் அலர்ட், அலறும் அதிமுக.! 

கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விட திமுக தலைவர் ஸ்டாலினை அதிகம் விமர்சித்தவர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தான். அவர் ஸ்டாலினை ஒருமையில் பேசியதை அதிமுக தலைமை ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. மேலும் பாஜகவின் தீவிர ஆதரவும் அவருக்கு இருந்தது. அப்போது திமுக சொன்ன ஊழல் அமைச்சர்கள் லிஸ்டில் ராஜேந்திர பாலாஜியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

அதோடு  அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்று மிகப் பெரிய பட்டியலை ஆளுநரிடம் கொண்டுபோய் கொடுத்தது திமுக. ஆனால் அதன்மேல் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்துள்ள அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்றவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என சொல்லிக்கொண்டே இருந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது அவர் சொன்னது போலவே திமுகவும் ஆட்சியை பிடித்துவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பணிகளில் தீவிரம் காட்டியதால் ஊழல் அமைச்சர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அப்போதே அமைச்சர்கள் ஊழல் குறித்த தகவல்களை திரட்ட அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் நியமித்ததாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முன்னாள் அமைச்சர்கள் பீதியில் ஆழ்ந்தனர். அவர்களில் முதன்மையானவர் ராஜேந்திர பாலாஜி தான்.  

தேர்தல் பிரச்சாரத்திலே ராஜேந்திர பாலாஜி போட்டியிட்ட ராஜபாளையம் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலின் "நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன். ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்" என்று கூறினார். இது ராஜேந்திர பாலாஜி மீதான ஸ்டாலினின் கோவத்தை வெளிப்படுத்தியது. 

ஆட்சிக்கு வந்ததும் ராஜேந்திர பாலாஜி மீதான அத்தனை புகார் பட்டியலையும் தூசி தட்டியுள்ளது திமுக தலைமை. அதில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது பினாமிகள் செய்த பல கோடி ரூபாய் ஊழல்கள் வெளிவந்துள்ளன. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி ராஜேந்திர பாலாஜி, மற்றும் அவரது பினாமிகள் ஆவினில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.61 கோடி ஊழலுக்கான ஆதாரங்களை தற்போதுள்ள அமைச்சரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒன்றே ராஜேந்திர பாலாஜியை சிறையில் தள்ள போதுமானதாக இருக்கும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. 

இது தவிர லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும்படி, அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாம். அவரும் தனது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என்றும், முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரங்கள் திமுக அரசுக்கு கிடைத்துள்ளதாக தலைமை செயலக வட்டத்திலும் பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களும் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட பின்பே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை தீவிரப்படுத்த திமுக தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை எடப்பாடி செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களை திரட்டுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இந்த தகவல்கள் அதிமுக வட்டாரத்துக்கும் தெரியவந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.