உள்ளாட்சி தேர்தலி திமுக-தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்த சந்தேகம் வரக் காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.. ஒரு காலத்தில் ஓ..ஹோ.. என்று இருந்த தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறது. கட்சி ஆரம்பித்த உடனேயே சந்தித்த தேர்தலில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தேமுதிக இப்போது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கட்சித் தலைவர் எப்போது களப்பணியில் இருந்து ஓய்வெடுத்தோரோ, அப்போதே தேமுதிகவில் இருந்து நிர்வாகிகள் பிரிய ஆரம்பித்தனர். கடைசி தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் கூட இல்லாத நிலைக்கு தேமுதிமுக தள்ளப்பட்டிருப்பது அவலத்தின் உச்சம். இருப்பினும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, கூட்டணி குறித்து பேச வருமாறு மாறி மாறி, அதிமுகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.
ஒற்றை இலக்கத்தில் சொற்ப இடங்களை மட்டுமே அதிமுக தருவதாக கூறியதால், அதிலிருந்து விலகி, திமுகவின் பேச்சு வார்த்தைக்காக காத்திருந்தது தேமுதிக. அவர்களும் கண்டு கொள்ளாததால், இறுதி நேரத்தில் அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் சொற்ப வாக்குகளை பெற்று படுதோல்வி அடைந்தது தேமுதிக. இதன் பிறகு கட்சி இருக்கும் இடமே தெரியாமல் போகும் அளவுக்கு அதள பாதாளத்தில் உள்ளது தேமுதிக. இருப்பினும் தேர்தலுக்கு பிறகு உதயநிதி முதல், ஸ்டாலின் வரை வரிசையாக விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று நேராக சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதனால் ஆச்சர்யமடைந்த பிறக் கட்சியினர், ஒருவேளை உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி தேமுதிகவுடன் திமுக உறவாடுகிறது என விமர்சித்தனர். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுக, அமமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வரும் திமுக, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தேமுதிகவையும் நாடுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாமகவும் திமுகவுடன் நெருக்கம் பாராட்டி வருகிறது. ஒருவேளை பாமகவும் திமுக கூட்டணிக்கு வருகிறதோ? என்கிற அளவுக்கு மிக நெருக்கமான உறவாக மலர்ந்து வருகிறது. ஆனாலும் சில எதிர்பார்ப்புகளோடு தான் பாமக திமுகவுடன் நெருக்கத்தில் இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
திமுகவை பொறுத்தவரை ஆட்சி மீதான எதிர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறது. இதனைத் தான் சட்டசபை வளாகத்தில் தம்மை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பின்னணியில் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற ஜி.கே.மணி வழக்கம் போல பல அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதார்த்தமாக இந்த தேமுதிக விவகாரம் டாக்டர் ராமதாஸின் காதுக்கு வர, அதிர்ச்சியடைந்த அவர், இதற்கு வாய்ப்பே இல்லை என்றாராம்.
ஆரம்பத்தில் இருந்தே தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் ஏக பொருத்தமாக இருக்கும். அதிமுக-திமுக என்றால், மறுபுறம் தேமுதிக-பாமக எனக் கூறும் அளவிற்கு ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. ஒரே கூட்டணியில் இருவரும் இருக்கும் போது கூட பயங்கர சண்டைகள் வந்த காலகட்டமும் இருந்தது. இப்படியிருக்க, திமுக அமைச்சர் துரைமுருகனிடம் இதுகுறித்து விசாரிக்க, அவரோ இதனை முற்றிலும் மறுத்துள்ளார். அந்த கட்சியுடன் எல்லாம் கூட்டணி வராது; ஏற்கனவே கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கே சீட் ஒதுக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் தேமுதிகவை கூட்டணிக்குள் எதற்கு கொண்டு வரவேண்டும்? அப்படி எந்த யோசனையும் திமுகவிடம் இல்லை- தேமுதிகவும் வரும் என எதிர்பார்க்காவில்லை" எனக் கூறியிருக்கிறார் துரைமுருகன்.
மகிழ்ச்சியடைந்த டாக்டர் ராமதாஸ், இருப்பினும் தேமுதிகவை திமுகவிற்குள் வர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுக் கூறியிருக்கிறார். இவர் இப்படி பயப்படுவதற்கு காரணமும் இருக்கிறது. அதாவது, திமுக-தேமுதிக கூட்டணி உருவானால் வட தமிழகத்தில் பாமகவிற்கு பின்னடைவு ஏற்படும். அந்த பின்னடைவு லோக்சபா தேர்தலில் பாமகவின் பார்கெய்ன் பவரை குறைக்கும். அதனால் கூட்டணியில் சொற்ப இடங்கள் கிடைக்கும் நிலைமை உருவாகும். மேலும், திமுக தயவில் தேமுதிகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்தால் பாமகவின் எதிர்கால அரசியலுக்கு சிக்கலாகிவிடும். தேமுதிக மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டே போவதுதான் பாமகவுக்கும் நல்லது என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்..