திமுக உடன் அதிமுகவை இணைக்க தூது போன கி.வீரமணி… அதிமுகவில் தற்போது என்ன நடக்கிறது? விரிவான ஒரு அறிக்கை….

திமுக உடன் அதிமுகவை இணைக்க தூது போன கி.வீரமணி… அதிமுகவில் தற்போது என்ன நடக்கிறது? விரிவான ஒரு அறிக்கை….

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி விவகாரம் தாய் அமைப்பாப்பான திகவிற்கு வருத்தமளிப்பதாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கவலை தெரிவித்திருந்தார். இந்த சூழலில் எம்.ஜி.ஆர். இறுதி காலத்தில் அதிமுகவை திமுகவில் இணைக்கும் முயற்சி நடைபெற்றதாகவும் அதற்கு தான் தூது சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த பின்னணியில் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தேசிய கட்சிகள் எவ்வாறு முயன்றனர் என்ற வரலாற்று நிகழ்வை விரிவாக எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரங்களை பார்க்கலாம். 

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தது முதல் - இன்று அ.தி.மு.க.வின் பிளவை வைத்து ஆதாயம் காணத் துடிக்கும் இக்காலகட்டம் வரை பின்னணியில் இருப்பது டில்லி தலைமை அரசியலே! தி.மு.க. தலைவர் நினைத்திருந்தால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித் திருக்கலாம்; ஆனால், தி.மு.க. தலைவர் கண்ணியமான அணுகுமுறையை மேற்கொண்டார். பங்காளிகள் யார்? பகையாளிகள் யார்? என்பதை அ.தி.மு.க. உணரவேண்டும். தி.மு.க.வைப் பொறுத்தவரை அது ஒரு எஃகு கோட்டை - அதனை அசைக்க யாராலும் முடியாது என்று  அறிக்கை விடுத்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அ.தி.மு.க.வின் பொன்விழா

அ.தி.மு.க. அதன் பொன்விழாவைக் கொண்டாடி மகிழவேண்டிய தருணத்தில், ‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையிலும்', பச்சையான நிர்வாணத் தன்மையில் பளிச்சிடும் தலைமைப் பதவி வெறிக்காக ‘சர்வபரித் தியாகத்தை' நடத்தி, கொள்கைகளைக் காவு கொடுத்தும், டில்லி சரணம் பாடி, அடகு வைத்த பொருள்பற்றிக் கவலைப்படாமல், அந்தப் பொருளை யாரோ ஒருவர் எடுத்துக்கொள்வதாக ஒரு பொய்யழுகை அழுவதும், போலித்தனத்தின் போக்கிடமாவதும் எவ்வகையிலும் பொது நிலையாளர்களால், அக்கட்சியின் கொள்கை உள்ளத்தோடு மிஞ்சியுள்ள ஒரு சில  உண்மைத் தொண்டர்களான சகோதரர்கள், ‘ரத்தத்தின் ரத்தங்களால்' ஒருபோதும் ஜீரணிக்க  முடியாத ஒன்றாகும்.

ஒரு அமைப்பு - அதுவும் அரசியலில் ஒரு கோடி உறுப்பினர்களுக்குமேல் இருப்பதாகப் பெருமை பேசிடும் இயக்கத்தின் உண்மை எதிரிகள் யார்? நண்பர்கள் யார்?

என்ன என்ன கொள்கை நிலைப்பாடுகள்? அதனை அழிப்பதற்கும், அதனைச் சுட்டுச் சாம்பலாக்கி, அதன்மீது பதவி நாற்காலியைத் தமிழ்நாட்டில் அமைக்க கனவு காணும் கட்சி- பண பலம், அதிகார பலம், ஊடக பலம், அடாவடித்தனம், தந்திரம் - ‘இவற்றை' நம்பி, தமிழ் நாட்டைப் பிடிக்கக் கனவு கண்டு, கட்சியைப் பிளந்து, தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கி, செயலற்ற நிலையில், போட்டா போட்டி முக்கோண கோஷ்டிகளும்,  மண்டியிடும் மூவர் குடுமியும் எம் கையில்தான் என்று காவிகள் கனத்த குரலில் சொல்லாமல் செய்துகாட்டும் நடவடிக்கையை சாதாரண மக்கள்கூடப் புரிந்துகொள்வார்கள். ஏனோ துணிந்து எதிரி ஏதோ தி.மு.க. போல திசை திருப்பலைச் செய்து கெட்டுப் போக இப்படி பந்தயம் கட்டிக் கெட்டுப் போகும்  'அரசியலையா' செய்வது?

காலில் விழுவது மட்டுமே கற்ற பாடம் என்பது பெருமைக்குரியதா?'

50 ஆண்டில் ஒரு உருப்படியான தலைமையை உருவாக்காது, ‘காலில் விழுவது மட்டுமே கற்ற பாடம் என்பதும் பெருமைக்குரியதா?' விருப்பு - வெறுப்பு இன்றி சற்று நிதானித்து சிந்திக்கட்டும்!

அண்ணா, ‘‘வீடு இருந்தால்தானே ஓடு மாற்றலாம்'' என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன உவமை இப்போது உங்களுக்கு நினைவூட்டப்பட வேண்டியதாகி விட்டது.

கட்சியைப் பிளக்கும் காவிகளிடம் நீங்கள் காலைப் பிடித்துக்கொண்டு காப்பாற்றச் சொல்வது, ''கசாப்புக் காரனிடம்  கருணை வேண்டுவது'' என்ற செம்மறியாடுகளின் பரிதாப நிலை போன்றது அல்லவா!

மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சியை நடத்தினார்? எண்ணிப்பாருங்கள் அ.தி.மு.க.வினரே!

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, தி.மு.க.வின் ஒருமனதான தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க் கட்சியை நடத்தினார்? எண்ணிப்பாருங்கள் அ.தி.மு.க. வினரே!

3 ஆண்டுகாலத்திற்குள் ‘கவிழ்ப்பு' நடத்திடவும் - கட்சியைப் பிளந்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் (மாறாக ‘கூவத்தூர்கள்' எப்படி என்பது இப்போது சந்தையில் பேசப்படும் சந்தைக் கடைப் பேச்சாகி நிற்கிறது) ஈடுபட்டாரா அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்? நினைத்திருந்தால் செய்திருக்கத்தான் முடியாதா? அவர் நடத்தியது கண்ணியமான அரசியல்!

அவரது பொறுமை - ‘‘பொறுத்தவர் பூமி ஆள்வார்'' என்ற பழமொழிக்கேற்ப - மக்களின் பேராதரவு பெற்ற கற்பாறையின் மீதல்லவா இன்று நிற்கிறார்; உங்கள் கட்சியை அன்று பிளந்தும் - இணைப்பு நாடகம், பிறகு பல 'வித்தைகள்' என்றும் நடத்துபவர்கள்- உங்களை சரணம் பாட வைத்தால், உங்களுக்கு விடியல் வருமா?

சட்டப் போராட்டத்தின்மூலமே ஒரு அரசியல் கட்சி நடத்திட முயன்றால், அது மக்களிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது என்றே அதற்குப் பொருள்.

பங்காளிக்கும், பகையாளிக்கும் உள்ள வேறுபாடுகள்பற்றிய தெளிவான புரிதல் வேண்டாமா?

எனவே, உண்மையான அரசியல் எதிரி யார்? உண்மையான அரசியல் நண்பன் யார்? பங்காளிக்கும், பகையாளிக்கும் உள்ள வேறுபாடுபற்றிய தெளிவான புரிதல் வேண்டாமா? எனவே, சில பழைய பதிவுகளை நினைவு கூருகிறோம்.

1972 இல் தி.மு.க. தலைமையின்மீது ஏற்பட்ட அதிருப்தி என்று காரணம் சொல்லப்பட்டாலும், அதன் பின்னணி அப்போதிருந்த டில்லி தலைமைதான்! தமிழ்நாட்டிலிருந்து சென்று அன்றைய பிரதமருக்கு ஆலோசகரான இடதுசாரியில் பிரபலமாக இருந்தவரே, தி.மு.க.வை உடைத்தால்தான் தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியான தங்களது ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்ற தவறான அரசியல் கணக்குப் போட்டதின் விளைவே அது!

வருமான வரித்துறை ஏவுகணையாகவும் அப்போதும் பயன்பட்டது என்பதும் பழைய வரலாறு! தந்தை பெரியார்- எம்.ஜி.ஆர். சந்திப்பு

கட்சிப் பிளவைத் தடுக்க தந்தை பெரியார், எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்க, (1972 அக்டோபர் 12, இரவு 11.30 மணிக்குத் தொலைப்பேசி வழி உரையாடல்) ''அய்யா வரக்கூடாது; நானே நாளை காலை அய்யாவை நேரில் வந்து சந்திக்கிறேன்'' என்று கூறி, அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எம்.ஜி.ஆர். அவர்கள் (தி.மு.க.வின் அன்றைய பொருளாளர்) பெரியார் திடலுக்கு வந்து, நீண்ட நேரம் சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் பேசினார். (என்னை அருகில் இருக்க  அய்யா ஆணையிட்டதால், உடன் இருந்தேன்). 

அய்யா, எந்தக் காரணம் கொண்டும் ‘இயக்கம் பிரியக் கூடாது' என்று எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

‘உங்கள் குறைகள்பற்றி நானே கலைஞரிடம் பேசுகிறேன், பொறுத்திருங்கள்' என்றும் கூறினார்.

‘அய்யா, யோசிக்கிறேன்' என்றவர், மீண்டும் எதுவும் இல்லாமல் சில நாட்களில் புதிய கட்சி அறிவிப்பினை செய்துவிட்டார்.  தந்தை பெரியார் அவர்களேகூட இதன் பின்னணியை விளக்கி, பல முக்கிய பெருநகரங்களில் தி.மு.க.வை உடைப்பதை எதிர்த்து, எம்.ஜி.ஆரைக் கண்டித்து விளக்கமாக நீண்ட ஒரு சுற்றுப் பயணத்தையே மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். விழுப்புரம் போன்ற ஊர்களில் பயணம் செய்த பெரியார் வேனைக்கூட, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் சிலர் கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுகளும் உண்டு!

அய்யா கொள்கைப்படிதான் நடத்துவேன்; அதனை ஒருபோதும் மீற மாட்டேன்: எம்.ஜி.ஆர்.

பிறகு ஒரு பொது நிகழ்ச்சியில், திருமண வரவேற்பில் - அய்யாவுக்கு வணக்கம் தெரிவித்து அமர்ந்த எம்.ஜி.ஆர். அவர்கள், அருகில் என்னை அழைத்து, ‘காதோடு காதாக' ஒரு செய்தியை சொன்னார். பலரும் பார்த்துக் கொண்டி ருந்தனர். (பழைய ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில்).

தந்தை பெரியார் வேனில் தனியே திரும்பும்போது, அய்யா கேட்குமுன், நானே அய்யா அவர்களிடம் சொன்னேன்; ‘‘நான் தனிக்கட்சி நடத்தினாலும், அய்யா கொள்கைப்படிதான் நடத்துவேன்; அதனை ஒருபோதும் மீற மாட்டேன்; அய்யா உறுதியாக இதை நம்பலாம் என்று அய்யாவிடம் சொல்லுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லச் சொன்னார் என்றேன்.

அய்யா, ‘அப்படியா?' என்று கேட்டுவிட்டு, சிரித்துக் கொண்டார்; வேறு ஏதும் சொல்லவில்லை.

பிறகு அய்யாவுக்குப்பின் அம்மா தலைமை - அய்யா சிலை திறப்பு, அண்ணா மேம்பாலம் அருகே - இப்படி பல நிகழ்வுகள் - தேர்தலில் திராவிடர் கழகம், தி.மு.க. வையே ஆதரித்தது பெரியார் ஆணைப்படி! அதன்பிறகு, எம்.ஜி.ஆர். இரண்டுமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி. தி.மு.க. எதிர்க்கட்சித் தலைமை என்ற நிலையே தொடர்ந்தது. கடைசிவரை எம்.ஜி.ஆர். ஆட்சியை கழகம் எதிர்த்தே வந்தது.

அகில இந்திய கட்சிகளும் மாறி மாறி அ.தி.மு.க. - தி.மு.க. தலைமையிலே தோளில் சவாரி செய்ததும், தமிழ்நாட்டு ஆட்சி என்பதைக் கனவுகூட காண முடியாத நிலையே தொடர்ந்தது!

மற்ற மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டில் ஒருபோதும் ‘தொங்கு சட்டசபை' ஏற்பட்டதில்லை

தமிழ்நாட்டு வாக்காளர்கள் எல்லா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ‘தோசையைத் திருப்பிப் போட்டது போலவே' மாறி மாறி வாக்களித்துள்ளனரே தவிர, மற்ற மாநிலங்களைப்போல, இங்கு ஒருபோதும் ‘தொங்கு சட்டசபை' ஏற்பட்டதில்லை. நான் முன்பு கூறியபடி, ‘‘தங்கும் சட்டசபைதான்'' ஏற்பட்டது; பலமுறை ஆட்சிக் கலைப்புகளுக்குப் பிறகும்கூட!

இரண்டாவது முறை வெற்றி பெற்று அமைச்சரவையை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசு (அ.தி.மு.க.) அமைத்த பிறகு, ஒரு நாள் மூத்த பத்திரிகையாளர் நண்பர் சோலை என்னைப் பார்க்க வந்து, ‘‘முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உங்களைச் சந்திக்க விரும்புகிறார்;  முக்கிய விஷயம் ஏதும் பேசுவார் எனத் தெரிகிறது'' என்றார்.

எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. நாம் தி.மு.க.வை, கலைஞரை ஆதரிக்கின்ற நிலையில், இது எதற்காக இருக்கும் என்ற அய்யத்துடன், அவரை இராமா வரம் தோட்டத்தில் சந்தித்தேன். அந்நாள் நிர்வாகி சம் பந்தம் அவர்களுடன் - எம்.ஜி.ஆர். சிற்றுண்டி பரிமாறி விட்டு, தனியே என்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேசியபோது, 

‘‘அ.தி.மு.க.வைத் தொடங்கவேண்டிய அரசியல் கட்டாய சூழ்நிலைபற்றி விளக்கிவிட்டு, நல்ல படித்த இளைஞர்கள் பலரும் தி.மு.க.விலிருந்து வேறு அகில இந்திய கட்சிகளுக்குப் போய்விடாமல் கொள்கைமீது அவர்களுக்குள்ள பற்றை பாசத்தைக் காப்பாற்றிடவே தனிக்கட்சி; கலைஞர்தான் தலைவர் என்றே உணரு கிறேன். நமது பிளவுபட்ட இயக்கம் ஒன்றாகவேண்டும் என்றே விரும்புகிறேன். இதை நீங்கள் கலைஞரிடம் சொல்லி, அதற்கு ஆவன செய்யுங்கள். உடனே இணைந்து விடுவது வேண்டாம்; காரணம், தலைவர்கள் ஒன்றானாலும், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு உடனே உள ரீதியாக சரியாக வராது; சற்று சில நிகழ்வுகள் இணைந்து நடத்தி, பிறகு இணைந்தால் தொண்டர்களும் மனப்பூர்வமாக இணைவார்கள். இதை கலைஞரிடம் பேசிவிட்டு, எனக்குச் சொல்லுங்கள்; தொலைப்பேசியில் கூட சொல்லுங்கள்; ஏனென்றால், நீங்கள் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்'' என்றார்.

நான், நமது கலைஞரை (ஆலிவர் ரோடு இல்லத்தில்) உடனே மாலை அவசர சந்திப்பாகச் சென்று பேசினேன்.

அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை மானியக் கோரிக்கை பட்ஜெட் தொடர் கூட்டம்; எதிர்க் கட்சித் தலைவர் உரையைத் தீவிரமாகத் தயாரித்துக் கொண்டிருந்தார் கலைஞர்; சண்முகநாதன் குறிப்புகளைத் தயாரிக்க உதவுகிறார்!

நான் கூறியதை கலைஞர் அவர்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, ‘‘என்ன ஆசிரியர், இதற்கு முன்பு ஒருமுறை ஒருவர்மூலம் சொல்லி, என்னை ஏமாற்றினார் எம்.ஜி.ஆர். இப்போது உங்கள்மூலம் சொல்லி, என்னை ஏமாற்றப் பார்க்கிறார் போலும்'' என்று சிரித்தவாறே கூறினார்.

நான் உடனே ‘‘எனக்கு அப்படித் தோன்றவில்லை - அதை அவர்  முழுமனதோடு கூறியதாகத்தான் அவரது காரண காரிய உரையாடல்மூலம் எனக்கு விளங்கியது; இருந்தாலும், இந்த முயற்சி நல்லதுதானே - அதனால் என்ன நமக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டு விடப் போகிறது? தயவு செய்து இதனை மறுத்துவிடவேண்டாம்'' என்று கூறினேன்.

கலைஞர் மிகவும் பெருந்தன்மையுடன் ஏற்று, ‘‘சரி சட்டமன்றத்தில் நான் எதுவும் கடுமையாகப் பேசி, விமர்சிக்காமல் எனது பேச்சை அமைத்துக் கொள்கிறேன். மேற்கொண்டு என்ன என்பதற்கு எனது சமிக்ஞையாக அது இருக்கட்டும்'' என்று கூறினார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து, ‘நன்றி' கூறினார்

நான் மகிழ்ச்சியுடன் ‘நன்றி!' கூறிவிட்டு,  வீட்டிற்கு வந்து, முதலமைச்சருக்கு ‘தொலைப்பேசி'மூலம் முழு தகவல் கூறினேன். ‘‘யோசிப்பதாகக்'' கலைஞர் சொன்னார், சட்டமன்றத் தொடர் கூட்ட நடவடிக்கைகளில் இதனை நீங்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறினேன். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து, ‘நன்றி' என்று கூறினார்!

இராமாவரம் தோட்டத்தில் நான் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அங்கே என்னை பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களும், மதுரை முத்து அவர்களும் சந்தித்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் - எதற்கு என்று மற்றவர்கள்மூலம் விசாரித்துள்ளனர் என்று பிறகு அறிந்தேன்.

இத்தகவல் மத்திய உளவுப்பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பார்ப்பன அய்.பி.எஸ். அதிகாரிமூலம் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கும் சென்றுள்ளது - பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது! இடையில் சில வாரங்கள் சென்றன.

ஒரு நாள் காலையில், கோபாலபுரத்தில் கலைஞரை ஏதோ முக்கிய விஷமாய்ச் சந்திக்கச் சென்றேன்; உடன் திரு.சம்பந்தம் அவர்களையும் அழைத்துச் சென்றேன்.

தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்புதான் மய்யமான பொருள்

கலைஞர், ‘‘சரியான நேரத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும். இன்னும் சற்று நேரத்தில், சுமார் 10.30 மணிக்கு ஒரிசா முதலமைச்சர் பிஜு பட்நாயக் வரவிருக்கிறார் என்னை சந்திக்க - தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்புதான் மய்யமான பொருள்'' என்றார்.

நான் மகிழ்ச்சியுடன், ‘‘மகிழ்ச்சிதான்; தயவு செய்து நீங்களும், எம்.ஜி.ஆரும் மட்டும் தனியே ஒரு அறையில் தனித்து சந்தித்து, மனந்திறந்து பேசுங்கள் - பிரச்சினைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்'' என்று கூறி, விடைபெற்றேன்.

அதேபோல, முதலில் மற்றவர்களோடும், பிஜுபட்நாயக்கோடும் இரு தலைவர்களும் பேசினர். பிறகு தனியே இருவரும் ஒரு தனி அறையில் அரை மணிநேரத்திற்குமேல் பேசினர்.

மூன்று நிபந்தனைகள்!

ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். (இதனை கலைஞரே பிறகு வெளியிட்டுள்ளார்) மூன்று முக்கிய முடிவுகள் இணைப்பதற்குமுன் - நிபந்தனைகளாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

நீங்களே முதலமைச்சராக இருங்கள்; பெயர் தி.மு.க. என்றுதான் இருக்கவேண்டும் என்றார் கலைஞர்.

1. காரணம், அண்ணா உருவாக்கியது;  கொடி அப்படியே இருக்கட்டும். (அண்ணா உருவம் இருக்கலாம்).

2. 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். சமூகநீதி காப்பாற்ற ஒரு நிபந்தனை.

3. கலைஞர் தலைவராக தொடர, எம்.ஜி.ஆர்.  முதலமைச்சராகத் தொடரலாம். (இதை சோலைக்கும், எனக்கும் ‘முரசொலி' விருது வழங்கியபோதும், கலைஞரே குறிப்பிட்டுப் பேசியுள்ளார்) 

எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

அதற்குப் பிறகு (அ.தி.மு.க.வில் சில ‘தலைவர்களின் திசை திருப்பலோடு) ஒன்றிய அரசின் உளவுத் துறையின்மூலம் சில  சிதைவுச் செயல்கள் - இவற்றுள் எவை காரணமோ?

கலைஞர் என்னை அழைத்து தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்

வேலூரில் மூப்பனார் தலைமையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ‘தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு கிடையாது' என்று எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு, அதிர்ச்சியைத் தந்தது. கலைஞர் என்னை அழைத்து தனது வேதனையை என்னுடன் பகிர்ந்ததுடன், ‘‘நான் முதலில் என்ன சொன்னேன்; அதுதானே நடந்தது'' என்றார்!

திராவிடர் இயக்கத்தை உடைப்பது அந்நாளிலிருந்து இந்நாள் வரை டில்லியே நடத்தியுள்ளது!

இதிலிருந்து ஒன்று திராவிடர் இயக்கத்தை உடைப்பது என்பது அந்நாளிலிருந்து இந்நாள் வரை டில்லியே நடத்தியுள்ளது! அதன் மற்றொரு காட்சிதான் இப்போது அ.தி.மு.க.வை உடைப்பது!

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த கலைஞர், அதனைப் புரிந்து வெளியேறி, தனது இயக்கத்தை உரிய நேரத்தில் காப்பாற்றினார் - எதையும் தொலைநோக்குடன் பார்க்கும் அரசியல் விற்பன்னராக கலைஞர் இருந்தார். அரசியலில் அவர் ஒரு அனுபவம் செறிந்த அரசியல் ஞானியாயிற்றே!

தி.க. - தி.மு.க.வுடன் உரசலுக்கு பா.ஜ.க.வுடன் உறவே  அந்நாளில் காரணமாக அமைந்தது! அது ஒரு தற்காலிகமே! சமூகநீதியைக் காப்பாற்ற திராவிடர் கழகம் அ.தி.மு.க.வைப் பயன்படுத்திக் கொண்டது. 69 சதவிகித சட்டப் பாதுகாப்பினை ஏற்படுத்தியும் கொடுத்தது.

திராவிட இயக்கத்தின் வேர் எதிலிருந்து வந்தது என்பதை இன்றைய அ.தி.மு.க. தலைவர்களில் ஒரு சிலராவது சிந்தித்தால், இந்த அடமானப் பொருளாக அது ஒருபோதும் ஆகியிருக்காது!

எப்படி மீட்பது?

யாரால்?

பங்காளி யார்? பகையாளி யார்?

எது தற்காலிகம்? எது நிரந்தரம்?

என்பது புரிந்தால் போதும், விடியல் உண்மையாகக் கிடைக்கும்.

பி.ஜே.பி.யின் எந்தத் தந்திர உபாயங்களும் தி.மு.க. என்ற எஃகு கோட்டையை அசைக்க முடியாது

தி.மு.க. தலைவர் நாட்டில் நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளைக் கவனமாகக் கணித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவரின் அமைதி ஆழமானது; ஆட்சிச் செயல்பாடுகளில்தான் அவரின் கவனமும், காரியமும் நடப்பது போற்றத்தக்கதாகும். பி.ஜே.பி.யின் எந்தத் தந்திர உபாயங்களும் தி.மு.க. என்ற எஃகு கோட்டையை அசைக்க முடியாது  - முடியவே முடியாது.

கடந்த கால வரலாற்றினைப் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவே இந்த அறிக்கை!

தொடரட்டும் இந்த ஆக்கப்பூர்வ பணிகள்!

இளைஞர்களுக்குத் திராவிட இயக்க உண்மை வரலாற்றை, நோக்கத்தைப் புரிய வைக்க பாசறைக் கூட்டங்களை தி.மு.க. நடத்துவது போற்றத்தக்கது - தொடரட்டும் இந்த ஆக்கப்பூர்வ பணிகள்!

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com