அய்யோ ஓடுங்கடி..இல்லனா அரஸ்ட் பண்ணிடுவாங்க...தே.மு.தி.க. போராட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்!

அய்யோ ஓடுங்கடி..இல்லனா அரஸ்ட் பண்ணிடுவாங்க...தே.மு.தி.க. போராட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்!

தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். கட்சிக் கொடியோடு வந்தவர்கள் போலீசாரை கண்டதும் மின்னல் வேகத்தில் சென்றதன் காரணம் என்ன? 

சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 9-ம் தேதியன்று தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பட்டரை பெருமத்தூர் டோல்கேட் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் போராட்டத்திற்கு பெண்கள் கூட்டம் போதாமல் இருந்தது. இதனால் சாதுர்யமாக முடிவெடுத்த கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வந்த பெண்கள் சிலரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் இணைத்து விட்டனர். 

இதையடுத்து டோல்கேட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்வதற்கு முற்பட்டனர். ஆண்களை ஆண் போலீசார் கைது செய்ய, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை கைது செய்வதற்கு பெண் போலீசார் தயாராயினர். 

ஆனால் போலீசாரை பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைதாவதற்கு பயந்து சாலையில் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்வதுதானே முறை? கைதுக்கு பயந்தால் எதற்காக ஆர்ப்பாட்டத்திற்கு வந்தீர்கள் என போலீசாரின் நியாயமான கேள்விக்கு பதிலளிக்கவும் இல்லை அந்த போராளிகள். 

அய்யோ அரஸ்ட் பண்ணிடப் போறாங்கடி... ஆளுக்கொரு பக்கம் எஸ்கேப் ஆகிடலாம் என கையில் இருந்த தே.மு.தி.க. கொடியை கீழே போட்டு விட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். ஏதோ கூப்பிட்டார்கள் என்று கூட்டத்தோடு வந்தோம்.. அதற்காக போலீஸ் வண்டியிலெல்லாம் ஏறுவோமா? என நைசாக நழுவிய இந்த பெண்களால் அங்கு பரபரப்பும் சிரிப்பலையும் உண்டானது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com