ஒருங்கிணைப்பாளர் விவகாரம்...ஓபிஎஸ் வழக்கில் பின்வாங்கிய இபிஎஸ்!

கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் அழைக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு உண்டு.

ஒருங்கிணைப்பாளர் விவகாரம்...ஓபிஎஸ் வழக்கில் பின்வாங்கிய இபிஎஸ்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்த உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தெரிவித்த தகவல்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காலாவதி ஆன ஒருங்கிணைப்பாளர் பதவி:

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி அறிவித்தனர். இதனை அடுத்து அடுத்த நாளே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், 23 தீர்மானங்களும் அதிமுக பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டுவிட்டதால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும், இனி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர முடியாது, அவர் அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் மட்டுமே இருக்கிறார் என சுமார் 46 நிமிட அளவில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசினார். இதனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் காலாவதி ஆகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பினர் மீண்டும் மீண்டும் கூறி வந்தனர்.

ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் எழுதிய கடிதம்:

காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கு  அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட இருந்தனர். இதற்காக ஏ மற்றும் பி விண்ணப்பங்களில் கையெழுத்திட விண்ணப்ப படிவங்களை அனுப்புங்கள் எனக்கோரி ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றுக் கூறி ஈபிஎஸ்க்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த ஈபிஎஸ், அண்ணே, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் காலாவதி ஆகிவிட்டதால் இனி நீங்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை எனக்கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கூறிய பதில்:

ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் தாக்கல் செய்யக்கூடாது எனக்கோரி இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அதிமுகவில் தனது பொறுப்பை இணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி இருந்தார். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பினர் விளக்கம் கேட்டு வந்தனர். அந்த வழக்கு, தனி நீதிபதியிடம் தாக்கலாமும் போது கூறிய தகவல்களையே மேல்முறையீட்டிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அவ்வாறு இணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியதாக ஈபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்னும் காலாவதி ஆகவில்லை:

ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நேற்று நடந்த போது, நீதிபதிகள் 4 முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதில்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் காலாவதி ஆகிவிட்டதா எனக்கேள்வி எழுப்பினர். இன்று அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் அழைக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்னும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை. அதாவது அந்த பதவிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கு பொதுக்குழுவிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம். இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் கூட்டத்தை கூட்ட முடியும். தடைகேட்ட ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்க என ஈபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

ஏற்கனவே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் காலாவதி ஆகிவிட்டதாக சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமி கூறி வந்தனர். இந்நிலையில், இன்று அந்த பதவிகள் காலாவதி ஆகவில்லை என்ற கூறியிருப்பதி அதிமுக தலைமைக்காக போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.