ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் ஈபிஎஸ் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்!

ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் ஈபிஎஸ் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், ஓபிஎஸ் - இபிஎஸ் இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. பின்னர், வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அதிமுக தலைமை கழகத்தில் சமூக விரோதிகளின் அத்துமீறல் இருக்கும் என்று நம்பத்தகுந்த செய்தி கிடைத்ததன் அடிப்படையில் அதிமுக கழகம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என 100 சதவீதம் நம்புவதாகவும் கூறினார். மேலும், அதிமுக கட்சி புரட்சித்தலைவர் எம். ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா காட்டிய பாதையிலேயே செல்வதாகவும் கூறினார். ஓபிஎஸ் திமுகவோடு ரகசிய கூட்டு வைத்துள்ளார் எனக் குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் ஐஸ் வைக்க வேண்டிய அவசியம் ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதனால், திமுகவோடு ஓபிஎஸ் ரகசிய உறவு வைத்துள்ளதாக சந்தேகம் தெரிவித்தார். கட்சி உடையக் கூடாது, சின்னம் முடங்கக் கூடாது என்பதற்காகவே இதுவரை அமைதி காத்தோம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.