கோட்டு சூட்டு போட்டு பந்தா காட்டி சென்றது இதற்கு தானா? வெளிநாட்டில் பல கோடி முதலீடு,..சிக்கும் அதிமுக மாஜிக்கள்.! 

கோட்டு சூட்டு போட்டு பந்தா காட்டி சென்றது இதற்கு தானா? வெளிநாட்டில் பல கோடி முதலீடு,..சிக்கும் அதிமுக மாஜிக்கள்.! 

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநாடுகள் சென்ற அமைச்சர்கள் உண்மையில் அந்நிய முதலீடுகளை ஈர்த்தார்களா? என்பது பற்றி ஆராய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதில் முக்கிய அதிமுக தலைகள் சிக்கும் என்றும் கூறுகிறார்கள்.  

கடந்த அதிமுக ஆட்சியின் போது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத் ஆகிய அமைச்சர்கள்  2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் சென்றார்கள். 

அவர்களது இந்த பயணத்தின் போது பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை கலந்தாலோசித்ததாகவும், பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டது. 

அதைத் தொடந்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்த பயணத்தின் வாயிலாக 41 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், அமெரிக்காவில் மட்டும் 35 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தங்களால் 35 ஆயிரம்  நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. 

அதைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் எளிதாக செய்யவும், இதற்கான அனுமதிகளை உடனடியாக ஒரே கட்டத்தில் வழங்கிடவும், பணிகளை துரிதப்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். இந்த குழுவில் உறுப்பினர்களாக அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம். சி. சம்பத்,பி. பெஞ்சமின் ஆகியோரை நியமித்தார். இந்த குழு உறுப்பினர்கள் மாதத்துக்கு ஒருமுறை கூடி அந்நிய முதலீடு தொடர்பான விஷயங்களை பேசுவார்கள் என்று கூறப்பட்டது. 

அதிமுக அரசின் இந்த அதிரடி அறிவிப்புகளால் தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், அதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இந்த பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சென்ற பயணம் போல தெரியவில்லை என்றும், இன்ப சுற்றுலா போல இருப்பதாக எதிர் கட்சிகள் விமர்சித்தன. 

அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினும் இந்த பயணத்தால் ஏற்பட்ட முதலீடுகள் எத்தனை? என்றும். உண்மையில் இந்த பயணத்துக்கு செலவு என்ன என்றும்? பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு அதிமுக சார்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை. 

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அரசின் வெளிநாட்டு பயணங்கள் பற்றியும், அதனால் உண்மையில் ஏதும் முதலீடுகள் வந்ததா என்பது பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் பற்றி கிளறவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் பற்றிய ஊழல் பட்டியலை கையில் வைத்துள்ள திமுக தலைமை. இந்த விவகாரத்தையும் கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக தலைகள் சிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

இது பற்றி திமுக தலைமைக்கு நெருங்கிய ஒருவர் கூறும்போது, அதிமுக அமைச்சர்கள் வெளிநாடு சென்றது அந்நிய முதலீட்டை திரட்ட இல்லை என்றும், தங்களுடைய சொந்த காசை வெளிநாடுகளில் பதுக்கவும், அதை அந்நிய பணமாக மாற்றவும் , தங்கள் சொந்த வேலைகளை பார்க்கவும், தங்கள் தொழில் முதலீடுகளை அங்கு கொட்டவுமே வெளிநாடு சென்றார்கள் என்று குற்றச்சாட்டினார். ஒருவேளை அவர்கள் சொன்னபடி வெளிநாட்டு முதலீடுகள் வந்தது என்றால் அதை ஒன்றையாவது காட்டச்சொல்லுங்கள் என்றும் எங்கள் தலைவர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் ஆவேசமாக கூறினார்.  
 
இதைத் தவிர முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவுக்கும்,  நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும், கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும் சென்று வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.