இராணுவ விமானத்தில் தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே..!

இராணுவ விமானத்தில் தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே..!

இலங்கையை திவாலாக்கிய, பொருளாதாரத்தை தவறாக கையாண்டதற்காக கோத்தபய ராஜபக்சேவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பதவி விலகுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, இலங்கை இராணுவத்தின் வானூர்தியில் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார்.

கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை விமானப்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அரசியலமைப்பின் கீழ் அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு அனுமதியுடன், அதிபர், அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 13 அதிகாலையில் மாலத்தீவிற்கு புறப்படுவதற்கு இலங்கை விமானப்படை விமானம் வழங்கப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ராஜபக்சே, அதிபராக இருக்கும் போது, ​​வழக்குகளில் இருந்து விலக்கு பெறுகிறார், புதிய அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ராஜினாமா செய்வதற்கு முன் வெளிநாடு தப்பிச் செல்ல விரும்பியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 9 அன்று போராட்டக்காரர்களால் இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து ஜுலை 13 அன்று தாம் பதவி விலகுவதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.