”கூர்வாளால் சாதிக்க முடியாததை...பேனா முனையால் சாதிக்க முடியும் என்று காட்டியவர்” - சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம்!

”கூர்வாளால் சாதிக்க முடியாததை...பேனா முனையால் சாதிக்க முடியும் என்று காட்டியவர்” - சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம்!

பத்திரிக்கை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனாரின் 42-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கூர்வாளால் சாதிக்க முடியாததை பேனா முனையால் சாதிக்க முடியும் என நினைத்து அதனை நிறைவேற்றிக் காட்டியவர்.

1930-களின் காலத்தில் மகாத்மா காந்தி மேடையொன்றில் பேசிக் கொண்டிருந்தார். விடுதலை குறித்து விறுவிறுப்பாக பேசிக் கொண்டிருந்தவர் சரசரவென கீழிறங்கி வெளியே சென்று விட்டு சில நொடிகள் கழித்து திரும்பி வந்தார். 

காந்தி கீழிறங்கி சென்றதற்கான காரணம் என்ன என குழம்பித் தவித்த பங்கேற்பாளர்களே மறுநாள் பத்திரிக்கையை பார்த்துதான் ஐயத்தை தீர்க்க வேண்டியதாயிருந்தது. காந்தி தனது பேச்சின் இடையே வெளியே சென்று ஆடிக்கொண்டிருந்த ஒரு பல்லை பிடுங்கி போட்டு விட்டு திரும்பி வந்து பேசினார் என குறிப்பிட்டார் ஆதித்தனார். 

மாபெரும் தலைவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பத்திரிக்கையாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டிய அறிவார்ந்தவரே சி.பா.ஆதித்தனார் அய்யா. 

பத்திரிக்கை உலகின் ஜாம்பவானாக முடிசூடா மன்னனாகவே திகழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனாரின் வாழ்க்கை தனக்கானதாக அல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவே அமைந்தது. 

1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியன்று திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி என்ற ஊரில் சிவந்தி ஆதித்தனார் - கனகம் அம்மையார் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்த மகான்தான் அய்யா சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார். 

இளமைப்பருவத்தில் லண்டனுக்கு சென்று வழக்கறிஞர் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருக்கு இதழியல் துறையிலும் ஆர்வம் பெருக்கெடுத்தது. எத்தகைய தவறையும் எழுத்தினால் வெளிக்கொணர முடியும் என்றும், அரசியல் அமைப்பையே பத்திரிக்கையால் அசைத்து விட முடியும் என்பதை நம்பியவர் அதை நிகழ்த்தியும் காட்டினார். 

ஆரம்பத்தில் சுதேசமித்ரன், டைம்ஸ் ஆப் இந்தியா இவற்றோடு லண்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஸ்பெக்டேட்டர் என்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கு செய்திகளை அனுப்பியவர், சொந்தமாக பத்திரிக்கை நிறுவனம் தொடங்கினார். 

மதுரையில் மதுரை முரசு என்ற பெயரில் பத்திரிக்கை தொடங்கியவர் பின்னர் தமிழன் என்ற பெயரில் மற்றொரு பத்திரிக்கையை தொடங்கினார். இந்த தமிழன் என்ற பத்திரிக்கையே பின்னாட்களில் தினத்தந்தி என்ற பெயரில் உருமாறியது. 

பிற்போக்குத் தனங்கள் நிறைந்திருந்த காலம் அது.. தந்தி வந்திருக்கிறது என்றால் மக்கள் அனைவருக்குமே அடிவயிறு கலங்கிப் போகும் காலம்.. இந்த தந்தி என்ற வார்த்தையை ஆக்கப்பூர்வமான சொல்லாடலாக அறிமுகப்படுத்தியதும், அனைவரின் வாயாலும் தினந்தந்தி எப்போது வெளியாகும் என எதிர்நோக்க வைத்திருப்பதுமே அய்யா அவர்களின் புரட்சிக்கு ஒரு சிறு உதாரணமாகும். 

செய்திகளில் நுணுக்கம், சமுதாயத்தில் புரட்சி, மொழியார்வம், சமூக அக்கறை, தமிழ் மக்களின் மீது அளப்பரிய ஆர்வம் இவை அனைத்துமே அய்யாவின் உயிராக இருந்தது. அதனாலேயே செயற்கரிய செய்த பெரியார் என்ற பாராட்டு வார்த்தைகளை பெரியாரிடம் இருந்தே நேரடியாக பெற்றார். 

பத்திரிக்கையாளராக, அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக என வெவ்வேறு துறைகளில் பணியாற்றிய சி.பா.ஆதித்தனாரின் புகழுக்கு இணையென்றால் அவரே எனலாம். நாம் தமிழர் என்ற வார்த்தையால் தமிழ்த் தேசியம் பேசிய ஆதித்தனார் அய்யா உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்றே முழங்கினார். 

இன்றைக்கு உலகெங்கிலும் எத்தனையோ மொழிகள் படர்ந்து விரிந்தாலும், அதற்கெல்லாம் தகப்பனாய் திகழ்வது தமிழ் மொழியே.. இதனை பாருக்கு முரசறைந்து ஒலித்தது இந்த பச்சைத் தமிழனே.. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com