சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா...!

2023ம் ஆண்டில் சீனாவை விட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா...!

மக்கள்தொகை அறிக்கை 2022:

நவம்பர் இடைப்பகுதியில் உலக மக்கள்தொகை எட்டு பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக திங்களன்று வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2022ன் மூலம் தெரியவருகிறது. இந்தியா அடுத்த ஆண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் விளங்கும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

 நவம்பர் 15, 2022 அன்று உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1950 க்குப் பிறகு உலக மக்கள்தொகை  மிக மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருகிறது, 2020 இல் வள்ர்ச்சி 1% க்கும் கீழ் குறைவாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளர அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.இது 2080 களில் 10.4 பில்லியன் மக்களை அடையும் என்றும் 2100 வரை அதே நிலையில் தொடரும் என்றும் கணித்துள்ளதாக தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் அவை பொது செயலாளர்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் உலக மக்கள்தொகை தினம்  ஒரு மைல்கல்லான ஆண்டில் வருவதாகவும் பூமியில் எட்டு பில்லியன் மக்களின் பிறப்பை  எதிர்பார்த்து இருப்பதாகவும்  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.  மேலும், இது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதற்கும், ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை வியத்தகு முறையில் குறைத்துள்ள ஆரோக்கியத்தின் முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்குமான ஒரு சந்தர்ப்பம் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஐநாவால் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை பூமியை ஒவ்வொருவரும் கவனித்துக்கொள்வதற்கான பகிரப்பட்ட பொறுப்பை நினைவூட்டுவதாகவும் ஒருவருக்கொருவர் கடமைகளை மறந்து செயல்படுவதாகவும் அதை  சிந்திக்க இது ஒரு சிறந்த தருணம் என்றும் அவர்  கூறினார்.

அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம்:

2022 இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு பகுதிகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவாக இருக்கும் எனவும் 2.3 பில்லியன் மக்கள் தொகையுடன் உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்தைக் கொண்டு விளங்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய மற்றும் தெற்கு ஆசியா 2.1 பில்லியன் மக்கள் தொகையுடன், மொத்த உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கிறது.

2022 இல் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனாவும் இந்தியாவும் தனித்தனியாக ஆசியாவில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டு விளங்கும் எனவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி:

2050 வரை உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான அதிகரிப்பு காங்கோ மக்கள் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மட்டுமே அதிக அளவில் இருக்கும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் 1.426 பில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக இருக்கும் எனவும் அறிக்கை மூலம் தெரிய வருகிறது.

2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை, இந்தியா முந்தும் எனவும் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை1.668 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

2010 மற்றும் 2021 க்கு இடையில் பத்து நாடுகள் 1 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையும் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது என்று அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மனிதனின் சராசரி ஆயுட்காலம்:

உலகளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2019 இல் 72.8 ஆண்டுகளை எட்டியுள்ளதாகவும் இது 1990 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 9 வருடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் இது  2050 இல் சராசரியாக ஏறக்குறைய 77.2 ஆண்டுகளாக என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

2021லும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் ஆயுட்காலம் உலக சராசரியை விட ஏழு ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கை:

மக்கள்தொகை கணிப்புகள் பற்றிய மதிப்பீடு சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டன என தெரிய வருகிறது.

அதன் கணிப்புகளில், 2100 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 8.8 பில்லியனை எட்டும் என்றும்  இதன் வரம்பு 6.8 பில்லியன் முதல் 11.8 பில்லியன் வரை இருக்கும் என்று கணித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

1950ம் ஆண்டு உலக மக்களின் இறப்பு சதவீதம் 20.150 என்பதும் அதுவே 2022ல் இறப்பு சதவீதம் 7.678 என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.