பிளவு படுகிறதா அதிமுக-பாஜக கூட்டணி? ஸ்டாலின் நடவடிக்கைகளால் அதிரும் பாஜக..!

அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?
பிளவு படுகிறதா அதிமுக-பாஜக  கூட்டணி? ஸ்டாலின் நடவடிக்கைகளால் அதிரும் பாஜக..!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடமும், அரசியல் தலைவர்களிடம் ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது தான்..
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழி இங்கு நிரூபணமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பெரிதும் தயங்கியது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, சிஏஏ போன்ற நடவடிக்கைகளால் பாஜக மீது அதிருப்தியில் தமிழக மக்கள் இருக்கையில், அவர்களுடன் எப்படி கூட்டணி வைப்பது என சிந்தித்துக் கொண்டே இருந்தது அதிமுக தலைமை.
இரண்டு மூன்று முறை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாடு வந்து சென்ற பிறகு தான் அதிமுக கூட்டணிக்கு ஒத்துக் கொண்டது. இருப்பினும் பாஜக தேர்தலில் 70 இடங்கள் கேட்டு அதிமுகவுடன் சண்டையிட்டுக் கொண்டது. மக்களிடன் உள்ள அதிருப்தி காரணமாக 20 இடங்களை மட்டுமே ஒதுக்கியது அதிமுக. மேலும் பாஜக கேட்ட இடங்களை அதிமுக ஒதுக்கவில்லை என்றும் அதிமுக மீது கோபத்தில் இருந்தது பாஜக தலைமை. 
தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற நிலையில், சசிகலாவின் அதிரடி வருகை, ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நிலவும் தலைமை குறித்த போட்டி என அடுத்தடுத்து பிரச்னைகள் எழுந்துள்ளதால் யாரிடம் பேசுவது என குழம்பியுள்ளனர் பாஜகவினர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் படி பாஜக கூறியும், அதிமுகவினர் அவரை கடுமையாக எதிர்த்து வருவதாலும், பாஜக அதிருப்தியில் உள்ளது. ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குரல் கொடுக்கையில் அதிமுகவினர் அமைதி காத்து வந்தனர்.
கட்சிக்குள்ளேயே உட்கட்சி பூசல் ஒருபுறம்  இருக்க, ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் வழக்குகளை தூசிதட்டி மீண்டும் கையில் எடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டு சாட்சியங்களுடன் ஆளுநரை பார்த்து ஒப்படைத்துள்ளார். 
இதனால் இன்னும் ஆட்டம் கண்டுள்ள அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைக்கலாமா என பாஜக சிந்தித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் தான் எடுக்கப் போகும் ஊழல் வழக்குகள் குறித்து பிரதமரிடம் கூறியதாகவும், அதற்கு பிரதமர் மோடி எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 
ஆக உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவில் பெரிய விக்கெட்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறை செல்ல நேரிட்டால் அதிமுகவின் சாம்ராஜ்யம் சரியத் துவங்கிவிடும் என்பதால், உள்ளாட்சி தேர்தலில் அவர்களோடு கூட்டணி வைக்கலாமா? இல்லை தனித்து போட்டியிடலாமா? என பாஜக தலைமை சிந்தித்து வருகிறது. 
இதுவரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்ற பாணியிலேயே எல்.முருகன் பேசி வரும் வேளையில், பாஜக தலைமையின் முடிவென்ன? பூனையின் அடுத்த ஆட்டம் என்ன? ஒருவேளை பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்குமோ? பார்க்கலாம்...

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com