முடிவுக்கு வருகிறதா 16 ஆண்டுகால ராஜபக்சே குடும்ப அரசியல்?

இந்தியாவின் தெற்கு அண்டை நாடான இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இது அரசாங்கத்தை பயங்கரமான நெருக்கடிக்குள் தள்ளியது.
1948ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாடு இப்போது பல மாதங்களாக மின்சாரம், உணவு, எரிபொருள்,மருந்துகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளின் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. அனைத்து அத்தியாவிசயமான பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்யுமாறு பல வாரங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார்.
எதற்காக போராட்டம்?
இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பம் உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து மக்கள் வன்முறை மோதல்கள் நடந்து வருகின்றன.
அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு, மருந்துகள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இலங்கை மக்கள் பல மாதங்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. எரிபொருள் தட்டுப்பாடு பெருமளவு மின்வெட்டுக்கு வழிவகுத்தது.
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்தது. இதனால் பலர் உணவைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரம் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
பிரச்சினைகளை தீர்ப்பதாக அதிபர் அறிவிப்பு:
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் தற்போதைய நிலையை குறிப்பிட்டு சில நாட்களுக்குள் தீர்வு காண்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
கோவிட் வைரஸினால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதையும் அதிபர் சுட்டிக்காட்டிருந்தார். நிதிக்கையிருப்பு இல்லாத இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் இந்த நிலை அதிக தாக்கம் செலுத்தியதையும் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும் அடுத்த சில வாரங்களில் அந்தக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியை மேற்கோள்காட்டி அவரது ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரச தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் குறித்த நாடுகள் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது..
அதன் பிரதிபலனாக தேவையான உதவி நாட்டிற்கு கிடைக்க உள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு விவசாயத் திட்டங்கள் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான தீர்வுகளைக் கண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியின் அரசியல் குழுக்கள் மக்களை திசைதிருப்ப முன்னெடுக்கும் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாடு பின்நோக்கி செல்லும் நிலை ஏற்படும் எனவும் அறிக்கை மூலம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதிபர் மாளிகை முற்றுகை:
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்சில் அங்கிருந்து தப்பி ஓடியதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் ராஜபக்சேவை குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், மூன்று மாதங்களாக அவரது அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்துள்ளனர்.
காவலர்கள் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மற்றும் பல முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். ஆனால் இது சட்ட விரோதம் என்று கூறி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில் சனிக்கிழமை காலை அதை விலக்கிக் கொண்டனர். கலகத் தடுப்புக் காவலர்களும் இராணுவத்தினரும் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிபரின் அலுவலக இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பலத்த தடுப்புகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் கருத்து:
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மக்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், அமைதியான போராட்டக்காரர்களுக்கு அதற்கான இடத்தையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று இராணுவம் மற்றும் காவல்துறைக்கும் வெள்ளிக்கிழமை அன்று அழைப்பு விடுத்தார். குழப்பமும் போராட்டமும் பொருளாதாரத்தை சரி செய்யாது என்றும் இலங்கை மக்களுக்குத் தேவையான அரசியல் நிலைத்தன்மையை கொண்டு வராது என்றும் சுங் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
தப்பி செல்கிறாரா ராஜபக்சே?
இலங்கை அதிபர் தப்பிச் செல்ல உள்ளதாக வெளியான தகவலால் பதற்றம் அதிகரிப்பு.
கொழும்பு கப்பற்படைக்கு சொந்தமான கப்பலில் தப்பி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் அவருக்கு சொந்தமான பொருள்கள் ஏற்றப்படுவதாகவும் தகவல். கப்பலில் அவருக்கு சொந்தமான பொருள்கள் அவசரமாக ஏற்றப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, நிலைமையை ஆலோசித்து விரைவான தீர்வுக்கு வர பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மக்கள் கிளர்ச்சி குறித்து விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இலங்கை சபாநாயகர் மகிந்த யப்பா அழைப்பு.