பாபர் மசூதி இடிப்பு தினம்... கருப்பு தினமாக அனுசரிக்கும் இஸ்லாமியர்கள்...

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம். மதசார்பற்ற நாடு என்ற பெருமையை கொண்ட இந்தியாவின் வரலாற்றில் கரும்புள்ளி குத்தியது போன்ற சம்பவம் அரங்கேறிய நாள்.
பாபர் மசூதி இடிப்பு தினம்... கருப்பு தினமாக அனுசரிக்கும் இஸ்லாமியர்கள்...
Published on
Updated on
1 min read

1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தின் ஆர்வலர்கள் , பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி பின்னர் வன்முறையாக மாறியதை தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதி கலவரக்காரர்களால் இடித்து தள்ளப்பட்டது. இந்துத்துவா ஆதரவாளர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கலரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இதையடுத்து மத்திய அரசு 1993-இல் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கிடையே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. 

இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தை போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்துவிட கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். 

இந்த நிலையில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்பினருக்கு சொந்தம் என்றும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது. அதேநேரம் பாபர் மசூதியை அயோத்தியிலேயே வேறு இடத்தில் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை இரு தரப்பினரும் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக் கொண்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com