கோவை பந்த் விவகாரம்: பாஜகவில் சீனியர், ஜூனியர் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறதா?

கோவை பந்த் விவகாரம்: பாஜகவில் சீனியர், ஜூனியர் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறதா?

கோவை பந்த் விவகாரத்தில் பாஜகவில் ஜூனியர், சீனியர் இடையே பனிப்போர் வெடித்துள்ளதாக அரசியல் அரங்கில் பேச்சு கிசுகிசுக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடித்த சம்பவம்:

கோவையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடே தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில், கோவை மக்கள் மட்டும் இந்த கார் வெடித்த விபத்தால் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த கார் விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்கள் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இது சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கி உள்ளது. 

பந்த் நிச்சயம் நடைபெறும்:

இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வரும் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக, 'பாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாகவும், திமுக அரசின் இந்த மிரட்டலுக்கெல்லாம் பாஜக பயப்படாது; திட்டமிட்டப்படி கோவையில் பந்த் நடக்கும்' என்று பகிரங்மாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பகக்த்தில் அறிவித்திருந்தார். 

காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம்:

இதற்கிடையில், தமிழக அரசை கண்டித்து பாஜக அறிவித்துள்ள பந்த்திற்கு தடைவிதிக்கக்கோரி கோவை தொழிலதிபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கோவையில் பந்த் நடத்த பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை எனவும், கட்சி நிர்வாகிகள் சிலரது இந்த அறிவிப்பை தலைமை அங்கீகரிக்கவில்லை' என்றும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

ஏன் இவ்வளவு முரண்பாடு:

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சில மணி நேரங்கள் முன்பு தான் பாஜகவின் மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் “பந்த்” நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் ”பந்த்திற்கு” அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே கட்சியில் இருந்துகொண்டு ஒரே சம்பவத்துக்கு சீனியர்கள் சிலரது நிலைப்பாட்டுக்கும், கட்சியின் மாநில தலைமையின் நிலைப்பாட்டுக்கும் ஏன் இவ்வளவு முரண்பாடு என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது. 

சீனியருக்கும், ஜூனியருக்கும் இடையே பனிப்போர்:

முன்னதாக, மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபின், கட்சியில் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. சில மாதங்களுக்குமுன்பு தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் அண்ணாமலை. அந்த நியமனத்தில் சீனியர்களின் குரல் பெரிதாக எடுபடவி்ல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த பின்னணியில் பார்க்கும் போது, கோவை பந்த் தொடர்பாக தமிழக பாஜக எடுத்துள்ள இருவேறு நிலைப்பாட்டின் மூலம், கட்சியில் சீனியர்கள், ஜூனியர்கள் இடையேயான பனிப்போர், கோவை கார் சிலிண்டர் விவகாரத்தில் வெடித்துள்ளதோ என்ற ஐயம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com