வருமான வரித்துறையினர் அதிரடி...செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை...தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

வருமான வரித்துறையினர் அதிரடி...செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை...தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

மதுவிலக்கு  மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிகாலையில் இருந்து நடத்தப்பட்டு வரும் சோதனை தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி  வருகின்றனர். இது தொடர்பாக இருவரும் ஆளுநரை நேரில் சந்தித்து செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் மனுவையும் அளித்தனர்.

இந்நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.  கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில்,அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு டெண்டர் முறைகேடுகள் செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த பகுதிக்கு, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com