கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 128 பேர் கைது!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 128 பேர் கைது!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டித்து 128 பேரை கைது செய்துள்ள காவல்துறை,  அவர்கள் மீது 10க்கு மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேற்று மாணவி மரணத்திற்கு நீதிக்கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்தனர். அதற்கு எதிர்வினையாக போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, பள்ளியின் உடைமைகளை சேதப்படுத்தி அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த கலவரம் பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், பள்ளி மீது நடவடிக்கை எடுத்திடும் வகையில் அதன் தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாணவிக்கு மனரீதியான துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக பள்ளி வேதியல் மற்று கணித ஆசிரியர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையை தூண்டியதாக 128 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது வன்முறையை தூண்டுதல், பொதுசொத்துக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.