ஓய்வு பெறுகிறார் கந்தசாமி ஐ.பி.எஸ்...!!!

ஓய்வு பெறுகிறார் கந்தசாமி ஐ.பி.எஸ்...!!!

34 வருடம் தமிழக காவல்துறையில் பணியாற்றிய கந்தசாமி ஐ.பி.எஸ் நாளையுடன் ஓய்வுபெற இருக்கிறார்.

1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி பரமசிவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், ஜெர்மன் உள்ளிட்ட 5 மொழிகளை பேசும் புலமை வாய்ந்தவர் கந்தசாமி. தமிழக காவல்துறையில் கன்னியாகுமரி எஸ்.பி.யாக பணிக்கு சேர்ந்த கந்தசாமி பின்னர் கோயம்புத்தூர், தஞ்சாவூர், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களிலும் எஸ்.பி.யாக பணியாற்றி வந்துள்ளார்.

டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற கந்தசாமி மதுரை, விழுப்புரம், திருச்சி, தொழில்நுட்ப பிரிவிலும், காவல் ஆணையராக மதுரையிலும் பணியாற்றி உள்ளார். பிறகு கந்தசாமி சிபிஐயில் சென்னை  டிஐஜியாகவும், மும்பையில் சிபிஐ இணை இயக்குனராகவும் இருந்துள்ளார். 

நாட்டையே உலுக்கிய குஜராத் சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2010ஆம் ஆண்டு கைது செய்த போது சிபிஐ அமைத்த தனிப்படையில் டிஐஜி கந்தசாமியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கேரளாவில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய லால்வின் ஊழல் வழக்கை விசாரித்தவரும் டிஜிபி கந்தசாமிதான். முன்னதாக 2007-ல் கோவாவில் பிரிட்டிஷ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததும் கந்தசாமி தலைமையிலான தனிப்படை தான். 

இதனை தொடர்ந்து ஏடிஜிபியாக  தொழில்நுட்ப பிரிவிலும், தமிழக காவல்துறை நிர்வாகப்பிரிவு  கந்தசாமி பணியாற்றிய போது காவல்துறை அலுவலகங்களில் காகிதமில்லா முறையை கொண்டு வந்தார்.  பின்னர் திமுக ஆட்சி அமைத்தவுடன் கடந்த மே 2021ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக கந்தசாமிக்கு பணி வழங்கப்பட்டது.  2021 தேர்தலுக்கு முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அமைத்த அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என  திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். டிஜிபியாக கந்தசாமி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக விஜயபாஸ்கர், வேலுமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், வீரமணி உட்பட பல அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

டிஜிபி கந்தசாமி 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடு பதக்கம், மெச்சதகுந்த பணிக்கான பிரதமரின் பதக்கம், முதல்வர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

34 வருடம் தமிழக காவல்துறையில் பணியாற்றிய கந்தசாமி ஐ.பி.எஸ் நாளையுடன் ஓய்வுபெறுகிறார். இவரது பணி ஓய்வு நிகழ்ச்சி நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற  உள்ளது.