வெறும் 423 கோடிக்கு விற்கப்படும் சென்னையின் அடையாளம்,! உண்மை மதிப்பு என்ன தெரியுமா?

வெறும் 423 கோடிக்கு விற்கப்படும் சென்னையின் அடையாளம்,! உண்மை மதிப்பு என்ன தெரியுமா?

3.44 ஏக்கர், 112 சாதாரண அறைகள், 57 டீலக்ஸ் அறைகள், 41 ராயல் கிளப் படுக்கையறைகள், 22 டீலகஸ் சூட்ஸ், 7 எக்ஸ்கியூட்டிவ் சூட்ஸ், 3 ராயல் சூட்ஸ் மற்றும் 1 பிரசிடென்ஷியல் அறை என மொத்தம் 240 சொகுசு அறைகள். நவரத்னா, கிலான்ட்ரோ, காயல் என்று மூன்று மிகப் பெரிய மூன்று உணவகங்கள். ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு  விருந்தளிக்கும் வகையில் மிகப்பெரிய டைனிங் ஹால்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டங்களை உள்ளடக்கியது தான் சென்னை லீ ராயல் மெரிடியன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.  சுமார் 1500 கோடி மதிப்பு கொண்ட இந்த ஹோட்டலை தான் வெறும் 423 கோடிக்கு வாங்கியுள்ளது பிரபல MGM  Health Care குழுமம். இது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக சென்னையின் அடையாளமாக திகழ்ந்த இந்த சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் மருத்துவமனையாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சரி, இப்படி 1500 கோடி மதிப்பு கொண்ட இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை ஏன் வெறும் 423 கோடிக்கு விற்கிறார்கள்? தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமிக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இந்த லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மேலும் சில இடங்களில் நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன. 

இந்த அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு சுமார் ரூ.18 கோடி நிலுவைத் தொகை கொடுக்கவேண்டியிருந்தது. இந்த தொகையை கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதிக் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கில் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்குமாறு அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகத்துக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு அதற்கு கால அவகாசமும் வழங்கியது. 

ஆனால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் கொடுக்காததால் கடந்த 2019ம் ஆண்டு இந்த தொகையை  வாராக்கடனாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்தது. அதன் பின்னரும் கொரோனா சூழ்நிலையால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் கொடுக்காததால் அந்நிறுவனத்திற்கு எதிராக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்  திவால் நடவடிக்கையை எடுத்தது. 

மேலும், கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகத்தின் சொத்துக்களை விற்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மாதவ் தீர், MGM HEALTHCARE  மற்றும் கோடாக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க முன்வந்தன.

இதில் MGM HEALTHCARE நிறுவனம் கொடுக்க முன்வந்த 423 கோடி ரூபாய் திட்டத்துக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் கொடுக்க, அந்நிறுவனத்திற்கு சென்னை, கோவை  லீ ராயல் மெரிடியன் ஹோட்டல்கள் சொந்தமாகியுள்ளது. 

சென்னை லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்திய பிறகு, அதை மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், கோவையிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எம்.ஜி.எம் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆனால் 1500 கோடி மதிப்பு கொண்ட இந்த ஹோட்டல்களை வெறும் 423 கோடிக்கு கொடுப்பதா என்று அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் பல பெருமைகள் கொண்ட லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் தற்போது இரு பெரும் நிறுவனங்களுக்கு இடையே சிக்கி தவிக்கிறது. இதனால் சென்னையின் அடையாளத்தில் ஒன்றாக பார்க்கப்பட்ட  லீ மெரிடியன் ஹோட்டல் மருத்துவமனையாக மாறப்போகிறதா? அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடரப்போகிறதா என்பது இன்னும் சில நாட்களுக்கு பின்பு தான் உறுதியாக தெரியவரும். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com