மதிமுக நிறைவேற்றிய 7 தீர்மானங்கள்...ஆளுநர் குறித்த 3வது தீர்மானம் சொல்வது என்ன?

மதிமுக நிறைவேற்றிய 7 தீர்மானங்கள்...ஆளுநர் குறித்த 3வது தீர்மானம் சொல்வது என்ன?

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மதிமுக நிர்வாகிகள் கூட்டம்:

சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில மாணவர் அணிச்செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆளுநர்கள் மாநில நடவடிக்கைகளில் அத்துமீறி நடந்து கொள்வது கூட்டாட்சித் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும் தகர்க்கும் செயலாக உள்ளதால் அந்த பதவியினை ஒழிக்க வேண்டுமெனவும், பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை சமூகநீதி அடிப்படையில் உரிய வாய்ப்பினை மத்திய அரசு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1: 

தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்களுக்குப் பாராட்டு..! 

கழகப் பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள், தமது 56 ஆண்டுகால தூய பொதுவாழ்வில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்தவர் ஆவார். 

தலைவர் வைகோ அவர்களின் பொதுவாழ்வுச் சாதனைகளை ‘மாமனிதன் வைகோ' என்ற தலைப்பில் ஆவணப்படமாக தயாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடச் செய்து, தமிழகத்தின் பெருமைக்குரிய அனைத்துத் தலைவர்களும்  வைகோவின் சிறப்புகளை பாராட்டி போற்றும் நிலை ஏற்படவும் காரணமாக விளங்கும் தலைமைக் கழகச் செயலாளர், இளந்தலைவர் துரை வைகோ அவர்களுக்கு, இளந்தமிழர் சேனையான மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணி உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.

தீர்மானம் எண் 2: 

இணையத்தில் பங்கெடுப்போம்..! 

இன்றைய அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கும், இயக்கத்தின் பணிகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்கும், இன்றியமையா சாதனமாக சமூக ஊடகங்களே விளங்கி வருகின்றது. சமூக ஊடகங்களில் நமது இயக்கத்தின் பணிகள் முழுமையாக இடம் பெறுவதன் மூலம்தான், இலட்சக்கணக்கான மக்களுக்கு நமது செயல்பாடுகளை கொண்டு சேர்க்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு, நமது தலைமைக் கழகச் செயலாளர் இளந்தலைவர் துரை வைகோ அவர்கள், இணையதள அணியை வலிமைப்படுத்திடும் நோக்கில் மண்டலப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்கள். இப்பொறுப்பாளர்களின் இணையதளப் பணிகளுக்கு மாணவர் அணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளும், கழகத்தை நேசிக்கும் மாணவர்களும் துணையாக இருந்து கடமை ஆற்றிட வேண்டுமென மாணவர் அணி அமைப்புகளை இக்கூட்டம் வலியுறுத்தி உள்ளது.

தீர்மானம் எண் 3: 

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்..!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்கள் விருப்பம் போல் ஆட்டிப்படைக்க முனைவதும், மாநில அரசுகள் விரும்புகின்ற வகையில் நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகளில் அத்துமீறி நடந்து கொள்வது கூட்டாட்சித் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும் தகர்க்கும் செயலாகவே அவதானிக்க வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக் கீரையாக நினைக்கும் மாநில ஆளுநர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசையும், அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

தீர்மானம் எண் 4: 

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை நடத்திடுவோம்!

மூண்டெழுந்த மொழிப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை தாய்மொழியாம் தமிழுக்காக தத்தம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு, ஆண்டுதோறும் கழக மாணவர் அணி சார்பில்  மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். வர இருக்கின்ற ஜனவரி 25 அன்று, எப்போதும் போல மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை கழக அமைப்பு மாவட்டங்கள் அனைத்திலும் தலைமைக் கழகம் அறிவிக்கின்ற சொற்பொழிவாளர்களைக் கொண்டு சிறப்பாக நடத்திட வேண்டுமென மாணவர் அணியினரை  வலியுறுத்தியுள்ளது.

தீர்மானம் எண் 5: 

இளைஞர் அணியினருக்குப் பாராட்டு..! 

கழக வாழ்நாள் உறுப்பினர் சேர்க்கும் பணியினை திட்டமிட்டு செம்மையாக செய்து முடித்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வாழ்நாள் உறுப்பினர் ஆக்கியிருக்கின்ற, கழக இளைஞர் அணிக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

தீர்மானம் எண் 6: 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுக!

பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்குமான இடஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி உள்ளது.

தீர்மானம் எண் 7: 

சங்கொலிக்கு சந்தா சேர்ப்போம்..! 

கழக வார ஏடான ‘சங்கொலி’ திராவிட இயக்கத்தின் கருத்துப் பெட்டகமாகவும், கொள்கை முழக்கமாகவும், கழகச் செய்திகளை தாங்கியும், வாரந்தோறும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆகவே, சங்கொலிக்கு சந்தா சேர்க்கின்ற பணியும் அவசியானது ஆகும். மாணவர் அணி சார்பில் சங்கொலிக்கு சந்தா சேர்க்கும் செயல்திட்டத்தை இக்கூட்டத்தின் வாயிலாக முன்வைக்கின்றோம். கழக அமைப்பின் 63 மாவட்டங்களிலும் மாணவர் அணி தோழர்கள் சங்கொலிக்கு சந்தா சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதியன்று சங்கொலி சந்தா சேர்க்கும் பணியினை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறு மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com