பதவியேற்றபின் மகாராஷ்டிர முதலமைச்சரின் முதல் தலைநகர் பயணம்....

பதவியேற்றபின் மகாராஷ்டிர முதலமைச்சரின் முதல் தலைநகர் பயணம்....

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு:

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பாஜகவின் தலைவர் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில்  நடைபெற்ர இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவை பதவிகளைப் பிரிப்பதைக் குறித்து அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாஜக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 11 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஷிண்டே குழு 29 அமைச்சர்களைப் பரிந்துரைத்துள்ளது கூறப்படுகிறது. மாநில உள்துறை நிர்வாகத்தை  ஏக்நாத் ஷிண்டே கவனிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகாத சூழலில், மகாராஷ்டிரா செய்தி நிறுவனங்கள் மற்றும் பாஜக, சிவசேனா ஆதரவாளர்கள் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர். 

அமித்ஷா உடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு:  

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக ஃபட்னாவிசும் பொறுப்பேற்ற பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இருவரும் முதல் முறையாக சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின் போது கூட, மகாராஷ்டிரா அரசியல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 
அமித் ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு பாஜக மற்றும் சிவசேனாவின் எம்.எல். ஏக்களில் யார் அமைச்சரவையில் இடம்பெறப்போகிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என நம்பப்படுகிறது.  

நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் இருவரும் மக்களுக்குச் சிறப்பாக  சேவை செய்வார்கள் எனவும், மேலும் மகாராஷ்டிராவை வளர்ச்சியின் பாதையில் பெரிய உயரங்களுக்கு கொண்டு செல்வார்கள் எனவும் நம்புவதாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மோடியுடன் உரையாடிய ஃபட்னாவிஸ், ஷிண்டே:

இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோர் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர்.

ஷிண்டே குழு மீதான வழக்கிற்கு விளக்கம்:

உத்தவ் தாக்கரே ஆதரவாளர் 15 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இருந்து தகுதி நீக்க நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏக்நாத் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும், மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் தங்கள் அணி உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு மீதான உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி பெறும் என கூறினார். 

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா - காங்கிரஸ் ஆகிவை கட்சிகள் அமைத்த மகாராஷ்டிரா மெகா கூட்டணியின் அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகம் செய்து,அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறியதையடுத்து பாஜக ஆதரவுடன் ஜூன் 30 ஆம் தேதி ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். 


முதலமைச்சராக ஷிண்டே பதவியேற்றப்பின் இதுவே அவருடைய முதல் தலைநகர் பயணமாகும்.