தலைமறைவாக இருந்த மகிந்த ராஜபக்சே நாடாளுமன்றத்திற்கு வந்தார்

தலைமறைவாக இருந்த மகிந்த ராஜபக்சே நாடாளுமன்றத்திற்கு வந்தார்

அரசியல் நெருக்கடி காரணமாக தலைமறைவாக இருந்த இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தற்போது  பொதுவெளிக்கு வந்துள்ளார்.

மக்களுக்கு பயந்து தலைமறைவு

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மண்ணின் பூர்வீக குடியான தமிழர்கள் மீது இலங்கை அரசு ஒடுக்குமுறையைச் செலுத்தி வந்தது. இதனால் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழர்களை ஒடுக்க உலகெங்கும் நிதி மற்றும் ஆயுத உதவி கோரியது இலங்கை அரசு. இதனால் அதன் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதற்கு தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்த போர் தான் எனக் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரம் பாதிப்படைந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். இதற்கு பயந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமறைவாக இருந்து வந்தார்.

இலங்கைக்கான புதிய அதிபர்

புதிய அதிபரை தேர்வு செய்யும் நோக்கில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார். அதே சமயம் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கேவை அடுத்த அதிபராக தேர்வு செய்யும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடலிலும் மகிந்த பங்கேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே

மகிந்த உட்பட ராஜக்சே சகோதரர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு உள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஒன்பதாம் தேதி இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். இதனையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.