ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்க்கு ஒதுக்கிய திமுக :
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்கே ஒதுக்கி திமுக அறிவித்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி :
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்தது.
கூட்டணி கட்சிகளை சந்தித்த ஈவிகேஎஸ் :
இதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அடுத்ததாக மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஆதரவு தருமாறு வலியுறுத்தி இருந்தார். அப்போது நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா்.
நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு அளிக்குமா?:
இந்த பின்னணியில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மநீம கட்சி ஆதரவு அளிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், மநீம கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு (கி) தேர்தலுக்கு மட்டும் ஆதரவு அளிக்குமா? அல்லது வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : ம.நீ.ம காங்கிரஸூக்கு ஆதரவா? இன்று அறிவிப்பு வெளியாகும்!
செயற்குழு கூட்டம் :
இந்த நிலையில், மநீம கட்சியின் அவசர நிா்வாகக்குழு - செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், கூட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தனது முடிவை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியானது.
காங்கிரஸ்க்கு ஆதரவு :
அதன்படி கூட்டத்திற்கு பிறகு, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார். மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் :
தொடர்ந்து இந்த கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம் என்றும் விளக்கம் அளித்தார்.