கள்ளக்குறிச்சி விவகாரம்...விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரம்...விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன் என 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்ம்மான முறையில் மரணமடைந்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஜூலை 17 அன்று அப்பள்ளியின் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலிஸ் கலைக்க முயன்றதால் கலவரம் வெடித்ததாக கூறப்படுகிறது.

தனியார் பள்ளிகளின் அறிவிப்பு

கலவரத்தில் தாக்குதலுக்குள்ளான தனியார் பள்ளிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளி சங்கங்களில் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தது. இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இருப்பினும், நேற்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ்  

இந்தநிலையில், அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பள்ளிகளின் விளக்கத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், தமிழகத்தில் நேற்று 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கின என்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியது குறிப்பிடத்தக்கது.