ஜெயலலிதா ஸ்டைலில் மிரட்டும் ஸ்டாலின்,..அலறும் கொங்குமண்டல நிர்வாகிகள்,.! 

ஜெயலலிதா ஸ்டைலில் மிரட்டும் ஸ்டாலின்,..அலறும் கொங்குமண்டல நிர்வாகிகள்,.! 

சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமானவர்களும், உள்ளடி வேலை பார்த்தவர்களும் கூடிய விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.  

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றது. அதில் திமுக தனித்து 125 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக மட்டும் தனித்து  65 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. 

தேர்தல் முடிவுகள் திமுக எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. திமுக தலைமை  150க்கும் மேல் இடங்களை எதிர்பார்க்க 125 இடங்களே கிடைத்தது. இதற்கு கொங்கு மண்டலத்தில் திமுக பெரும் பின்னடைவை சந்தித்ததே காரணமாக அமைந்தது. அதிலும் கோவையில் இருக்கும் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது. இதனால் திமுக தலைமை கோவை மண்டல திமுக பொறுப்பாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக  கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜை  நீக்கிவிட்டு அப்பொறுப்புக்கு பொள்ளாச்சி வேட்பாளரான டாக்டர் வரதராஜனை நியமிப்பதாக திமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது. இதற்கு திமுக வேட்பாளரை தோற்கடிக்க, தென்றல் செல்வராஜே உள்ளடி வேலை செய்ததாக திமுக தலைமைக்கு பறந்துவந்த குற்றச்சாட்டே காரணம் என்று கூறப்படுகிறது. 

தேர்தலுக்கு முன்பே கோவையின் இரண்டு, இரண்டு தொகுதிகளை பிரித்து அதற்கு பொறுப்பாளர்களை நியமித்தது திமுக. அதன்படி பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளை உள்ளடக்கிய கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜை நியமித்தது. இதில் பொள்ளாச்சி தொகுதியில் நிச்சயம் திமுக தான் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மேல் சுமத்தப்பட்ட பாலியல் குற்றசாட்டுகள் தான். 

இதனால் தான் எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் பொள்ளாச்சி தொகுதியை கேட்டுள்ளார் தென்றல் செல்வராஜ். ஆனால் தொகுதியில் அவருக்கு எதிரான நிலை இருப்பதாக வந்த அறிக்கையைத் தொடர்ந்து டாக்டர் வரதராஜை வேட்பாளராக்கியது திமுக தலைமை. ஆனால் வெறும் 1,782 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் வெற்றி பெற்றார். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது போல திமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதற்கு காரணம் என்னவென்று திமுக தலைமை விசாரிக்கும் போது தான் தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் செய்த உள்ளடி வேலைகள் திமுக தோற்க காரணம் என்று திமுக தலைமைக்கு தெரியவந்தது. மேலும் பொள்ளாச்சியில் தோற்ற டாக்டர் வரதராஜும்  தென்றல் செல்வராஜின் உள்ளடி வேலைகள் பற்றி திமுக தலைமையிடம் கூறியுள்ளார். இதன் காரணமாகவே மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டுள்ளார். 

கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட "இன்னும் சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது, திருத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். அப்போதே சில மாவட்ட செயலாளரகள் அரண்டுபோன நிலையில் இந்த செய்தியும் வெளிவந்து திமுக மாவட்ட செயலாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் கடும் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது

கருணாநிதி இருக்கும் போது இதுபோன்ற அதிரடி நீக்கங்கள் எதுவும் இருக்காது. பெரிய அளவில் புகார்கள் வந்தால் கூட பொறுமையாகவே முடிவெடுப்பார். ஆனால், ஸ்டாலின் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை பார்த்து இனி ஜெயலலிதா பாணியில் கட்சியை கொண்டுசெல்ல ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டாரா ஸ்டாலின் என்று சில திமுக உடன்பிறப்புகள் பேசிவருகிறார்கள்.