தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, 2019 ஜூலை 20 முதல் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பீகார் மாநிலம் பட்டனாவை சேர்ந்த இவர், இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று சிறிது நாட்கள் பத்திரிக்கையாளாராக பணியாற்றியுள்ளார்.
1976ம் ஆண்டு இந்திய காவல் ஐபிஎஸ் பணிக்கு தேர்வான ஆர் என் ரவி, கேரளாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலவேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர், பின்னர் மாநிலத்தின் காவல்துறை துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் பணியில் இருந்த போது தமிழகத்தை பற்றி நன்கு அறிந்தவர் என கூறப்படுகிறது. பின்னர், மத்திய அரசு பணிக்கு மாற்றபட்ட போது இவரின் அதிரடி நடவடிக்கைகளால் பல மாஃபியா கும்பலை ஒழித்து கட்டியுள்ளார்.அதை தொடர்ந்து உளவுத்துறையில் பணியாற்றிய போது ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பிரிவினை வாத குழுக்களை ஒடுக்க இவரின் திட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
2012ம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பு, தேசிய பாதுகாப்பு குறித்த நிகழ்வுகளை பற்றி கட்டுரை எழுதி வந்தார். பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி 2014ம் ஆண்டு அமைந்தவுடன், நாகலந்தில் உள்ள நாகா கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் மத்திய அரசின் பேச்சுவார்த்தை மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்பு இணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு ஜூலை வரை பொறுப்பில் இருந்த ஆர்.என்.ரவியை அதே ஆண்டில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
2020 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக சேர்த்து சிறிது காலம் பார்த்து வந்தார். ஆளுநராக உள்ள நாகாலாந்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்தில் மாநில அரசு இருப்பதாகவும் முதல்வர் நெஃபியூ ரியோவுக்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தின் 15வது ஆளுநராக ஆர்.என் ரவியை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் அதிகரபூர்வமாக அறிவித்துள்ளது.