மோடியை வழியனுப்பிய ஓபிஎஸ்!

மோடியை வழியனுப்பிய ஓபிஎஸ்!

பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார்.

அதிமுக உட்கட்சி மோதல்

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு நடக்கும் அதே சமயம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வருவாய்த துறையினரால் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் பிரச்சினை நடந்து கொண்டிருந்த அதே நேரம் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பிரச்சினையைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சரியான பிடி கொடுக்காமலே டெல்லி மேலிடம் இருந்து வந்தது.

செஸ் போட்டியை தொடங்கி வைக்க மோடி வருகை

சென்னையில் 44ஆவது செஸ் போட்டியைத் தொடங்கி வைக்க மோடி ஜூலை 28 அன்று வந்த நிலையில் அவரை வரவேற்க இபிஎஸ் விமான நிலையம் சென்றிருந்தார். ஆனால் மோடியை தனியாக சந்தித்துப் பேச இபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மோடி ஜூலை-29 அன்று டெல்லி புறப்படும் போது அவரை வழியனுப்ப ஓபிஎஸ் வந்திருந்தார். செய்தியாளர்களிடம் இச்சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது,பிரதமர் நரேந்திர மோடி தன்னை உடல்நிலை எப்படி உள்ளது என கேட்டார். நன்றாக உள்ளது என தெரிவித்தேன். உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என பிரதமர் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டிய தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதை பற்றி கேட்டதற்குதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் வெல்லும் என பன்னீர்செல்லும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியமா என கேட்டதற்க்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பும் நிகழ்வில் கொள்ள பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.