அனல் பறந்த வாதம்...வலிமையாக மோதிக் கொண்ட இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு!

அனல் பறந்த வாதம்...வலிமையாக மோதிக் கொண்ட இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு!

அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதிமுகவின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் போட்டியில் யார் அதிமுகவின் தலைமையை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது, ஜூலை 11 ஆம் நாள் நடைபெற உள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை கோரியுள்ள ஓ.பி.எஸ் வழக்கு.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளி வைத்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற தனிநீதிபதி கணேஷ் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் ஜூலை 11 ஆம் நாள் நடைபெற உள்ளது சிறப்புப் பொதுக்குழு என்றும் கடந்த ஜூன் 23 நடந்த பொதுக் குழுவின் நீட்சி அல்ல என்று கூறியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை-ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு தற்காலிக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனக் கூறியுள்ளனர்.

இரு தரப்பின் காரசார வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகாத நிலையில், தலைமைக்கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும் என கேள்வி எழுப்பினார்.  மேலும், விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் இபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.